கடந்த ஆண்டு முதலாகவே இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பல்வேறு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் மோதிக் கொள்ளும் நிலையில் இந்த ஆண்டின் தொடக்கமும் ஒரு இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண்கிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் அணிகளில் முன்னிலை வகிக்கும் நாடுகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள். கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன. அதில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றது. அதை தொடர்ந்து இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோத மீண்டும் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.
அந்த வகையில் தற்போது தொடர்கதையாக யு19 உலகக்கோப்பை போட்டியிலும் இறுதிப்போட்டிக்கு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான யு19 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த இறுதிப்போட்டி பிப்ரவரி 11ம் தேதியன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. தொடர்ந்து ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் சந்தித்தாலும் ஆஸ்திரேலியாவே வெற்றிப்பெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்கள் சாதனை படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.