நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த பரபரப்பான டி 20 ஆட்டத்தில் பெங்களூர் அணி போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த RCB அணியின் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். கோலி 41 பந்துகளில் 70 ரன்களும், படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.
206 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பதிலுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 11 வீதம் ரன்கள் சேர்த்து வந்த அந்த அணி ஜெய்ஸ்வால் விக்கெட்டுக்குப் பிறகு தடுமாறத் தொடங்கியது. ஆனாலும் துருவ் ஜூரெல் மற்றும் ஷுபம் துபே ஆகியோர் களத்தில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.
புவனேஷ்வர் குமார் வீசிய 18 ஆவது ஓவரில் 22 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணிக்குத் தேவைப்பட்டது. இதையடுத்து 19 ஆவது ஓவரை வீசவந்த ஹேசில்வுட் ஒரே ஒரு ரன் மட்டும் கொடுத்து துருவ் ஜூரெல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதன் பிறகு யாஷ் தயாள் 20 ஆவது ஓவரை சிறப்பாக வீசி 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்த சிறப்பான பந்துவிச்சுக்காக ஹேசில்வுட் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.