ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியதற்கு இழப்பீடை வட்டியோடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர்கள் தொடங்கிய காலத்திலிருந்து ஐபிஎல் அணிகளில் அங்கம் வகித்து வந்தது ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி. 2009ம் ஆண்டில் ஐபிஎல் போட்டியின் இறுதி வரை சென்று கோப்பையை வென்றது இந்த அணி. எனினும் நிதி நெருக்கடி காரணமாக பிசிசிஐக்கு செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாயை டெக்கான் சார்ஜர்ஸால் செலுத்த முடியாமல் போனது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை பிசிசிஐ 2012ல் ஐபிஎல்-ஐ விட்டு நீக்கியது. பிசிசிஐயின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கனெ தனிநபர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி ”பிசிசிஐ எடுத்த முடிவு சட்ட விரோதமானது. தற்போது டெக்கான் சார்ஜர்ஸின் உத்தேச மதிப்பு ரூ.4,800 கோடி. பிசிசிஐ இந்த தொகையை வட்டியுடன் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு அளிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு வழங்க வேண்டிய ரூ.850 கோடியையே வழங்காத பிசிசிஐ இந்த வழக்கில் இழப்பீடு தருவதை விட மேல்முறையீடு செய்யவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.