நேற்று அமெரிக்காவில் நடந்த இந்தியா – வங்கதேச போட்டியின்போது ரோஹித் சர்மாவை பார்க்க மைதானத்திற்குள் ஓடிய ரசிகரை அமெரிக்க போலீஸ் கையாண்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
fan caught by NYPD
உலக கோப்பை டி20 போட்டியின் லீக் போட்டிகள் அமெரிக்காவில் இன்று தொடங்கி நடைபெறுகின்றன. முன்னதாக சில அணிகள் இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றது.. அவ்வாறாக நேற்று இந்தியா – வங்கதேசம் இடையே பயிற்சி ஆட்டம் நடந்தது. அதை காண சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர்.
பொதுவாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடி சென்று கிரிக்கெட் வீரர்களை கட்டிப்பிடிப்பதும், காலில் விழுவதும் வழக்கம். அவர்களை அதிகாரிகளும் ஒன்றும் செய்யாமல் கையை பிடித்து அழைத்து சென்று விடுவார்கள். ஆனால் நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி சென்று ரோஹித் சர்மாவுக்கு கை கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த நியூயார்க் போலீஸ் பாய்ந்து சென்று அந்த ரசிகரை பிடித்து கீழே தள்ளினார். வேகமாக அங்கு வந்த மேலும் இரண்டு போலீஸார் ரசிகரின் மீது விழுந்து அவரை அமுக்கினர். இதை கண்டு பதறிய ரோஹித் சர்மா, அவரிடம் அவ்வளவு கடினமாக நடந்து கொள்ள வேண்டாம் என சொன்னார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் அங்கு வந்த போட்டி நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள், அவரை மென்மையாக நடத்துமாறும், மைதானத்திற்கு வெளியே அழைத்து செல்லுமாறும் கூறினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ”அமெரிக்காவில் ரூல்ஸே வேற நம்ம ஊர் மாதிரி நடந்துகொள்ள முடியாது” என்று சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் இதுபோன்ற விஷயங்களை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.