மக்கள் கையில் மை; மல்லையாவுக்கு தள்ளுபடி: மோடி அரசின் தாராளமயம்!

கேஸ்டன்
புதன், 16 நவம்பர் 2016 (15:59 IST)
ஒருபக்கம் கால் கடுக்க வங்கி வாசலில் ஏழை விவசாயி தன்னுடைய பணத்தை மாற்ற வரிசையில் நிற்க, மறுபக்கம் சத்தமே இல்லாமல் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மனமில்லாத மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் 7016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் பொதுமக்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என கூறி சாதாரண மக்களின் வாழ்க்கையை ஸ்தம்பித்து போக வைத்திருக்கிறது மத்திய அரசு. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் இந்த கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டா வெறுப்பாய் ஒவ்வொரு சாமானியனும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இதுவரை இந்த நடவடிக்கையால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் உள்ளது.
 
இன்னும் 50 நாட்கள் பொறுத்திருங்கள் என கண்ணீர் மல்க உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார் இந்திய பிரதமர் மோடி. எதற்கு இந்த நாடகம் யாரை ஏமாற்ற?. ஒரு சில ஏமாற்று பேர்வழிகள் கருப்பு பணம் சேர்த்து வைப்பார்கள், அவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களின் பணத்தை பிடுங்க திராணியில்லாத அரசு தனது அதிகாரத்தை சாமானியன் மீது காட்டுகிறது.
 
எல்லாவற்றையும் நாட்டின் நன்மைக்காக பொறுத்துக்கொண்டு சகித்துக்கொண்டு வாழ்கிறான் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும். ஆனால் கோடி கோடியாய் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து மக்களின் பணத்தை வங்கிகளில் இருந்து கோடி கோடியாய் கடன் வாங்கிய கடன்கார கோடீஸ்வரர்கள் மீது உங்கள் நடவடிக்கை பாயாதா?.
 
போதாத குறைக்கு அவர்கள் வாங்கிய கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்வது பொதுமக்களுக்கு செய்யும் எவ்வளவு பெரிய துரோகம். கருப்பு பணத்தை ஒழிக்கிறோம், பொருளாதாரத்தை மீட்கிறோம் என பொதுமக்கள் மீது சுமையை சுமத்திவிட்டு, கடன்வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடி அங்கும் சொகுசாக வாழ்ந்து வரும் இந்த நாட்டின் மீது அக்கறையில்லாத, பொறுப்பில்லாத, நாட்டை சீரழித்த தேடப்படும் குற்றவாளிக்கு சலுகைகள் வழங்குவதா?.
 
வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா பெற்றுள்ள 1201 கோடி ரூபாய் கடன் தொகை உட்பட வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாத 63 கோடீஸ்வர கடன்காரர்களின் கடனை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா திட்டமிட்டுள்ளது.
 
இன்னும் ஐம்பது நாட்கள் பொறுங்கள் மக்களே அதற்குள் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என பிரதமர் மோடியின் பேச்சை எப்படி நம்புவது, இன்னும் ஐம்பது நாளில் இந்த நாட்டை தொழில் அதிபர்களுக்கும் கூறுபோட்டு விற்றுவிடுவார்கள் என சாமானியர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். மக்கள் பணத்தையே வங்கிகளில் கடனாக பெற்றுக்கொண்டு கொடுக்கமுடியாது என முரண்டு பிடித்து சொகுசாக வாழும் கோடீஸ்வரர்களின் கோடிக் கணக்கான கடன்களை அசால்ட்டாக தள்ளுபடி செய்யும் அரசு 4000 ரூபாய் பணம் எடுக்க பொதுமக்கள் கையில் மை வைப்பது நியாயமா?.

 
அடுத்த கட்டுரையில்