வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா?

Webdunia
புதன், 27 மே 2020 (14:29 IST)
இந்தியாவின் மேற்குப் பகுதியில் வெட்டுக் கிளிகள் பெருமளவில் பயிர்களை நாசம் செய்துவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டிற்கு இல்லையென தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று.

2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ஆனால், வெட்டுக்கிளி படையெடுப்பைப் பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இதன் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் ஒருவேளை தாக்குதல் நடைபெற்றால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்க வேண்டுமென்றும் வேளாண் துறை கூறியிருக்கிறது.

அல்லது அரசின் அனுமதியைப் பெற்று ஒட்டுமொத்தமாக வான்வெளியிலிருந்து மருந்தைத் தெளிக்கலாம் என்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளிகள் படையாக உருவாகி பயிர்களைச் சேதப்படுத்தும் ஒரு பூச்சி. இவற்றின் ஆயுட்காலம் 6 முதல் எட்டு வாரங்கள். இதற்குள் மூன்று முறை இவை முட்டையிடுகின்றன. அறுவடைக்குத் தயாராக உள்ள வேளாண் பரப்பு எங்குள்ளது என்பதை காற்றின் மூலம் அறிந்து அந்தத் திசையில் இவை படையெடுப்பவை.

பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்குச் சமமாகும்.
கென்யா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்தியாவில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் The Locust Warning Organaisation (LWO) மூலம் வெட்டுக்கிளி படையெடுப்புகள் தொடர்பான அறிவிப்புகள் பெறப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்