பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (21:16 IST)
தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார்.
தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
 
#NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது.
 
தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது.
 
தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது.
 
பிரா அணியாத இயக்கம்
 
ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும், அவர், ''தன் மீது கவனத்தை ஈர்க்க'' முயற்சிக்கிறார் என்றும், வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செயலில் ஈடுபடுகிறார் என்றும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
தன் சொந்த விளம்பரத்துக்காக பெண்ணிய பிரசாரத்தை அவர் பயன்படுத்துகிறார் என்றும் சிலர் கருதுகின்றனர்.
 
''பிரா அணிவது உங்களுடைய விருப்பம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிந்து மார்பகங்களை வெளிக்காட்டும் வகையில் அவர் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அதுபோல அவர் செய்யத் தேவையில்லை,'' என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 
''பிரா அணியாததற்காக உங்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. உங்கள் மார்புக் காம்புகளை மறைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,'' என்கிறது இன்னொரு பதிவு.
 
''உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இதேபோல பிரா அணியாமல் சர்ச்சுக்கு நீங்கள் செல்ல முடியுமா? உங்கள் சகோதரியின் கணவரை அல்லது உங்கள் கணவருடைய பெற்றோரை இதுபோல சென்று சந்திக்க முடியுமா,'' போன்ற கேள்விகள் எழுவது மட்டுமல்லாது ''ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இதை அசௌகரியமாக உணர்கிறார்கள்,'' என்றும் கருத்துகள் பதிவிடப் பட்டுள்ளன.
 
மிக சமீபத்தில் ஹிவாசா என்ற மற்றொரு பிரபலமான பாடகியும் #NoBra இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.
 
தேர்வு செய்வதற்கு சுதந்திரம்
 
ஹாங்காங்கில் இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சோலுக்கு திரும்பியபோது உள்ளே பிரா போடாமல் டி-சர்ட் அணிந்து கொண்டு அவர் இறங்கி வந்த புகைப்படங்களும், காணொளிகளும் வைரலாகப் பரவின.
 
ஆனால், அதன் பிறகு சாமானியப் பெண்கள் மத்தியில் #NoBra இயக்கம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தென் கொரியாவில் பெண்கள் சுதந்திரத்தில் நாட்டம் காட்டுவது இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. 2018ல் ''மார்பில் இறுக்கமான உடைகளில் இருந்து விடுதலை,'' என்ற இயக்கம் தீவிரமடைந்தது.
 
பல பெண்கள் நீண்ட தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டு, மேக்-அப் இல்லாமல் வெளியில் சென்றனர். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
 
தென்கொரியாவில் உண்மைக்கு மாறான அழகு நிலைகளை உருவாக்கிக் கொள்வதற்கு மேக்-அப் மற்றும் தோல் பராமரிப்பில் பெண்கள் அதிக நேரம் செலவிடுதலுக்கு எதிராக இந்த முழக்கம் உருவானது.
 
பெண்களுக்கு ஆதரவாக ஒப்பனை செய்து கொள்ளாமல் தென்கொரிய யூ டியூப் நட்சத்திரம் லினா பேயே காணொளி வெளியிட்டதால், கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.
பிபிசியிடம் பேசிய பெண்களில் பலர், இந்த இரு இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினர். சமூக ஊடகங்களில் இது பரவுவதைப் பார்த்தால், புதிய வகையிலான போராளித்துவம் உருவாகிறது என்பதன் அறிகுறி என்று தெரியும்.
 
'பார்வையால் வல்லுறவு'
 
தென் கொரியாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஆணாதிக்க கலாசாரத்துக்கு எதிராகவும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும், கழிவறை மற்றும் பொது இடங்களில் ஆண்கள் 'ரகசிய கேமரா' பொருத்துவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
2018ல் நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ஒழிக்க வலியுறுத்தி சியோல் நகர தெருக்களில் பத்தாயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
 
பிபிசியிடம் பேசிய தென்கொரிய பெண்களில் சிலர் இருவேறு கருத்துகளில் இருக்கின்றனர். பிரா அணியாமல் செல்வதை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் தங்களால் அப்படி செல்ல முடியுமா என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை.
 
'பார்வையால் பாலியல் வல்லுறவு செய்தல்' என்ற போக்குதான் அவர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்ப்பது, அத்துமீறிய செயலாக உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.
 
பிரா அணியாமல் செல்வதில் பெண்களின் அனுபவங்கள் குறித்து 'No Brablem' என்ற ஆவணப்படத்தை 2014ல் தயாரித்த குழுவில் இருந்தவர் 28 வயதான ஜியாங் சியாங்-இயுன்.
 
பல்கலைக்கழக்தில் இருந்தபோது, பிரா அணிவது இயல்பானது என்று நாம் ஏன் நினைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியபோது, நண்பர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக சியோங் இயுன் தெரிவித்தார்.
 
தேர்வு செய்யும் உரிமை
 
இந்த விஷயத்தை பொதுவெளியில் நிறைய பெண்கள் விவாதிக்கிறார்கள் என்பது நல்லது தான் என்று அவர் நினைத்தாலும், டி-சர்ட்களில் மார்புக் காம்புகளை வெளிக் காட்டிக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் இன்னும் அவமானத்துக்குரிய செயலாகவே கருதுகிறார்கள் என்று நம்புகிறார்.
 
''தென்கொரியாவில் பிரா அணிவது இயல்பானதாகவே இன்னும் கருதப்படுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் பிரா அணிவதை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்,'' என்று அவர் கூறுகிறார்.
 
பார்க் ஐ-செயுல் என்ற 24 வயதான தென்கொரிய மாடல், பாடி பாசிடிவிட்டி இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த ஆண்டு பிரா அணியாமல் தலைநகர் சியோலில் மூன்று நாட்கள் சென்று அதை காணொளியாகப் பதிவு செய்ய முடிவு செய்தார்.
 
அந்த காணொளியை பல்லாயிரம் பேர் பார்த்ததால் அது பிரபலம் ஆனது.
 
தன்னைப் பின்தொடர்பவர்களில் சிலர் தோள்பட்டையில் பிடிமானம் இல்லா மென்மையான கப் உள்ள பிராலெட்களை தேர்வு செய்வதாக அவர் கூறுகிறார்.
 
# நோபிரா இயக்கம் சமூக ஊடகங்கள் மூலம் பரவியது.
 
``தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், அந்த காணொளி எடுத்த பிறகு நான் பிரா அணிவது இல்லை. இப்போது பெரும்பாலான நாட்களில் நான் கோடையில் பிராலெட் அணிகிறேன், குளிர்காலங்களில் பிரா இல்லாமலே செல்கிறேன்,'' என்கிறார் அவர்.
 
டேயெகு நகரைச் சேர்ந்த 22 வயதான காட்சி வடிவமைப்பு மாணவி நாஹ்யெயுன் லீ -யும் இதனால் ஈர்க்கப் பட்டுள்ளார். கெயிம்யுங் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு யிப்பீ என்ற முன்னணி பிராண்ட் உடன் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த மே மாதத்தில் இருந்து "Brassiere, it's okay, if you don't!" என்ற வாசகத்துடன் இந்த பிராண்ட்டில் காம்புகளை மறைக்கும் பட்டைகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.
 
பாடகி மற்றும் நடிகை சுல்லியின் புகைப்படங்களைப் பார்த்து தமக்கு உத்வேகம் கிடைத்திருப்பதாக ஜியோல்லனம்-டோ மாகாணத்தைச் சேர்ந்த டா-கியுங் என்ற 28 வயதுப் பெண் கூறுகிறார். அலுவலகத்தில் மேலதிகாரி அருகில் இருக்கும் போது பிரா அணிவதாகவும், ஆண் நண்பருடன் வெளியில் செல்லும் போது அணிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
 
தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் இருந்தது.
 
''பிரா அணிவது உனக்கு சவுகரியமாக இல்லாவிட்டால், அதை அணிய வேண்டாம் என்று என் ஆண் நண்பர் கூறுகிறார்,'' என்று அவர் தெரிவித்தார்.
 
இதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதாகப் பெண்கள் கூறுகின்றனர். ஆனால் பிரா அணியாமல் இருப்பது பற்றி ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?
 
போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் பயோமெக்கானிக்ஸ் துறையில் மூத்த விரிவுரையாளராக இருப்பவர் டாக்டர் ஜென்னி புர்பேஜ். பிரா அணிவதால் அசவுகரியம் அல்லது வலியாக உணர்வது என்பது ''சரியாகப் பொருந்தாத பிரா அணிவதுடன் தொடர்புடைய'' பிரச்சனை என்று அவர் கூறுகிறார்.
 
''எங்களுடைய ஆராய்ச்சிக் குழு அறிந்த வரையில், மார்பகப் புற்றுநோய்க்கும், பிரா அணியும் பழக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக, நம்பகமான எந்த அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்படவில்லை,'' என்று அவர் தெரிவிக்கிறார்.
 
1968ல் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டி நடந்த இடத்துக்கு வெளியே நடந்த போராட்டத்துக்குப் பிறகு, ''பிரா எரிக்கும் பெண்ணியவாதிகள்'' என்ற வாசகம் உருவானது.
 
அப்போது பெண்கள் - பிரா உள்ளிட்ட பொருட்களை குப்பைத் தொட்டியில் வீசினர். அது பெண்களின் அடக்குமுறைக்கான அடையாளமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இருந்தாலும் ஒருபோதும் உண்மையில் அதை அவர்கள் எரிக்கவில்லை.
 
ஆனால் அப்போதிருந்து பிரா எரிப்பு என்பது பெண்களின் விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது.
 
"பெண்ணியவாதிகள் எரியும் பிராக்கள்" என்ற சொற்றொடர் 1960 களின் பிற்பகுதியில் தோன்றியது
இந்த ஆண்டு ஜூன் மாதம், சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், பணியில் இருந்து வெளியேறி பிராக்களை எரித்து போக்குவரத்தை நிறுத்தினர். நியாயமான சம்பளம், அதிக சமத்துவம் கோரியும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளுக்கு முடிவு கட்டக் கோரியும் போராட்டம் நடத்தியபோது அவர்கள் இந்தச் செயல்களில் இறங்கினர்.
 
அக்டோபர் 13 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட பிரா இல்லாத நாள் என்பது, உலகெங்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் அதிக பாலின சமத்துவம் கோரி இதற்காக ஒரு நாளை கடைபிடித்தனர்.
 
பிரா இல்லாத நாள் என்பது ''எங்களுடைய பெண்ணியத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஒருபெண்ணாக யார் என்பதைக் காட்டுவதாக உள்ளது,'' என்று பத்திரிகையாளர் வனெஸ்ஸா அல்மெடா கூறியுள்ளார்.
 
''பெண்கள் எப்படி அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதன் அடையாளமாக பிரா இருக்கிறது,'' என்கிறார் அவர்.
 
ஆண்களும், பெண்களும் தங்கள் மார்புக் காம்புகளை வெளிக்காட்டும்போது சென்சார் செய்வதில் இரட்டை நிலைப்பாடு இருப்பதைக் குறிப்பிட்டு சமீபத்திய ஆண்டுகளில் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.
 
2014 டிசம்பரில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் Free the Nipple என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பெண்களின் மார்பகங்களை மையமாகக் கொண்ட கிரிமினல் செயல்பாடுகள் மற்றும் சென்சார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார் நகரில் இளம்பெண்கள் குழுவினர் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.
 
இதனால் ''Free the Nipple'' பிரசாரம் உலகளாவிய செயல்பாடாக உருவெடுத்தது.
 
தென்கொரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட ''No Bra'' இயக்கம், பெண்களின் உடல்களை மையமாகக் கொண்டு உலகெங்கும் உள்ள கட்டுப்பாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
தென்கொரியாவில் இதில் பங்கேற்ற பெண்கள், கலாசார எதிர்பார்ப்புகள் காரணமாக இதற்கு தயக்கம் காட்டுவதாகக் கூறுகின்றனர். இருந்தாலும், ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற அளவில் இது அடிப்படை குறித்தது என்று பல பெண்கள் கூறியுள்ளனர்.
 
இந்த இயக்கம் தீவிரமடைந்து வரும் வேகத்தைப் பார்த்தால், பிரா அணியாமல் இருப்பது பிரச்சனையில்லை என்ற நிலை வரும் வரையில் இந்த ஹேஷ்டேக் வேகம் குறையாது என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்