பாலியல் வல்லுறவு: 40 பெண்களை சீரழித்த நைஜீரிய ஆண் கைது

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (14:21 IST)
நைஜீரியாவில் உள்ள ஒரு நகரில் கடந்த ஒரு வருடத்தில் நாற்பது பெண்களை பாலியல் வல்லுறவு செய்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
 
நைஜீரியாவின் வடக்கு நகரமான குவானார் டங்கோராவில், ஒரு தாய் தனது மகளின் அறையிலிருந்த அந்த நபரைப் பிடித்தார் என்றும், ஆனால் தப்பித்துச் சென்ற அவரை பொது மக்கள் விரட்டி சென்று பிடித்தனர் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
 
10 வயது சிறுமிகள் முதல் 80 வயது பெண்கள் வரை பலரை அந்த நபர் பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என காவல்துறையினர் கூறுகின்றனர். சமீபகாலமாக நைஜீரியாவில் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.
 
கனோ நகரத்திலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் குவானார் டங்கோரா எனும் இந்த சிறு நகரம் உள்ளது. காவல்துறை எளிதில் அணுக முடியாத பகுதியாக இது உள்ளது. கடந்த ஒரு வருடமாக வீடுகளில் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும், ஏனெனில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்த அந்த நபர் வீட்டுக்குள் வந்து பெண்களை வல்லுறவு செய்ததாகவும் பிபிசியிடம் மக்கள் கூறுகின்றனர்.
 
''இனி நாங்கள் கண்களை மூடி தூங்கலாம்'' என ஒரு பெண் கூறுகிறார். நைஜீரியாவில் மூன்றில் ஒரு பெண், 25 வயதை அடைவதற்கு முன்பு ஏதே ஒரு விதத்தில் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்வதாகச் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் நைஜீரியாவில் பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்