பிட்காயின் மதிப்பு சரிவுக்கும், கஜகஸ்தான் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:03 IST)
பல மாதங்களுக்குப் பிறகு, பிட்காயினின் மதிப்பு சடசடவென சரிந்து வருகிறது. அதற்கு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் ஒரு காரணம் என்றால், கஜகஸ்தான் மக்கள் போராட்டம் மற்றொரு காரணம்.
 
கடந்த நவம்பர் 2021 காலத்தில் ஒரு பிட்காயினின் மதிப்பு சுமார் 67,582 அமெரிக்க டாலர் வரை தொட்டது. ஆனால் தற்போது சுமார் 41,150 டாலருக்கு சரிந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என செய்திகள் வெளியாயின.
 
அது போக கஜகஸ்தானில் நடந்து வரும் அரசியல் ரீதியிலான மக்கள் போராட்டங்கள், பிட்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பை பாதித்துள்ளன. பிட்காயின் உலகம் முழுக்க பரவி இருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் சாராத, அதிகார பரவல்தன்மை கொண்ட ஒரு பணப் பரிமாற்றமாக இருப்பதால், இந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தால்தான் அதன் மதிப்பு அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்கிறது என்று கூறுவது சிரமமானது.
 
ஆனால் பலரும் அமெரிக்க மத்திய வங்கியின் டிசம்பர் மாத அறிவிப்பு, பிட்காயின் மதிப்பை பாதித்த காரணங்களில் ஒன்றாக குறிப்பிடுகின்றனர். இந்த அறிவிப்பு வந்த பின், பிட்காயினில் முதலீடு செய்து வைத்திருந்த பாரம்பரிய முதலீட்டாளர்கள், அபாயம் குறைவான முதலீடுகளைத் தேடிச் செல்லத் தொடங்கினர்.
 
அதே நேரம், கஜகஸ்தான் நாட்டில் பிட்காயின் மைனிங் (புதிய பிட்காயின்களைக் கண்டுபிடிக்கும் செயல்முறை) பணிகள் நடந்து வருகின்றன. உலகளவில் நடக்கும் பிட்காயின் மைனிங்கில் இந்த நாட்டில் மட்டும் ஐந்தில் ஒரு பங்கு நடக்கிறது.
 
எரிபொருளின் விலை ஏற்றம் காரணமாக, கஜகஸ்தான் நாட்டு மக்கள் சாலையில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். அது கலவரமாக உருவெடுத்தது. போராட்டக்காரர்கள் அல்மாட்டி நகரத்தில் உள்ள பெரிய கட்டடங்களைக் கைப்பற்றினர்.
 
உலகளவில் ஒட்டுமொத்தமாக கண்டுபிடிக்கப்படும் மொத்த பிட்காயின்களில் கஜகஸ்தான் நாட்டில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பிட்காயின்கள் கண்டுபிடிக்கப்படுவதாக கருதப்படுகிறது. விலை மலிவான மின்சாரம் காரணமாக கஜகஸ்தானில் அப்பணிகள் நடப்பதாகக் கருதப்படுகிறது.
 
அந்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட இணைய துண்டிப்பும், பிட்காயின் கண்டுபிடிக்கும் பணிகளை பாதித்ததாகத் தெரிகிறது. இது பிட்காயின் மதிப்பை நேரடியாக பாதித்தது. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி 50,717 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு, ஜனவரி 1ஆம் தேதி சுமார் 47,733 அமெரிக்க டாலராகவும், ஜனவரி 10ஆம் தேதி 41,150 டாலராகவும் மதிப்பு சரிந்தது.
 
கடந்த நவம்பர் மாதம் 67,000 டாலரில் இருந்த பிட்காயினின் மதிப்பு, தற்போது 41,150 டாலராக சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 38 சதவீதம் அதன் மதிப்பு சரிந்துள்ளது. மற்ற கிரிப்டோ கரன்சியான எத்தீரியத்தின் மதிப்பு கடந்த புதன்கிழமை 3,800 டாலராக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 3,200 அமெரிக்க டாலராக சரிந்தது.
 
"பணவீக்கப் பிரச்னைகள், வட்டி விகித உயர்வு போன்ற விவகாரங்கள் ஸ்பெகுலேட்டார்களின் மனதில் இருப்பதாகத் தெரிகிறது. பல சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாததை நாங்கள் பார்க்கிறோம்" என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிப்டோ நிறுவனமான ஸ்டேக் ஃபண்டின் மேத்திவ் டிப்.
 
கிரிப்டோகரன்சிகள் குறிப்பாக பிட்காயின் தொடர்ந்து பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. மொசிலா ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பு (இந்த அமைப்புதான் ஃபயர் ஃபாக்ஸ் என்கிற பிரவுசரை உருவாக்கியது), பயனர்களின் கடும் விமர்சனத்துக்குப் பிறகு கிரிப்டோகரன்சியை நன்கொடையாகப் பெறுவதை நிறுத்தியுள்ளது.
 
கடந்த பல ஆண்டுகளாக மொசிலா ஃபவுண்டேஷன் கிரிப்டோ கரன்சியை நன்கொடையாகப் பெற்று வந்தது. டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் எந்தவித அமைப்புகளாலும் நெறிமுறைப்படுத்தப்படாததன்மை போன்ற காரணங்களைத் தொடர்ந்து பல விமர்சகர்களால் கிரிப்டோகரன்சிகள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்