COP26 பருவநிலை மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பிய இஸ்ரேல் அமைச்சர்!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (13:33 IST)
சக்கர நாற்காலியில் பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தால், திங்கட்கிழமை சிஓபி26 (COP26) மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என ஓர் இஸ்ரேலிய அமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு தன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு சரியான வசதிகளைச் செய்து கொடுக்காதது வருத்தமளிக்கிறது என இஸ்ரேலிய எரிசக்தித் துறை அமைச்சர் கரீன் எல்ஹாரர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னெட்டின் குழுவில் உள்ள ஓர் அதிகாரி, பருவநிலை மாநாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் இது குறித்து புகாரளித்துள்ளதாகக் கூறினார்.

கரீன் எல்ஹாரர் மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனில், பருவநிலை மாநாட்டின் செவ்வாய்கிழமை நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள முடியாது என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி கூறியதாக ஓர் அதிகாரி கூறினார்.

"அமைச்சர் கரீன் எல்ஹாரர் சிஓபி பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன், அதற்காக நான் அவரிடம் என் ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் வரவேற்கக் கூடிய மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பருவநிலை மாநாடுதான் நமக்கு தேவை," என இஸ்ரேல் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் நீல் விகன் தன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாநாடு நடக்கும் இடத்துக்கு நடந்து செல்வதற்கு அல்லது வாகனத்தில் செல்வதற்கு மட்டுமே வசதிகள் இருந்தன. வாகன சேவை, சக்கர நாற்காலியோடு பயணிக்க தகுந்ததாக இல்லை. எனவே மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் கரீன் எல்ஹாரர் சேனல் 12 என்கிற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஊடகத்திடம் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கரீன் எல்ஹாரர் கிளாஸ்கோ நகரத்தில் மாநாடு நடக்கும் இடத்துக்கு வெளியே இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகவும், எந்த வித ஏற்பாடுகளும் செய்யப்படாததால் 80 கிலோமீட்டர் தொலைவில் ஸ்காட்லாந்தின் தலைநகரமான எடின்பரோவில் உள்ள தம் விடுதி அறைக்கு திரும்பிச் சென்றதாகவும் அவரது அலுவலகம் 'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' பத்திரிகையிடம் கூறியுள்ளது.

"அமைச்சர் கரீன் எல்ஹாரர் இன்று மாநாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், விரக்தியடையச் செய்வதாகவும் இருக்கிறது.

"சிஓபி மாநாடு நடக்கும் இடம் அனைவரும் அணுகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சரிடம் இது தொடர்பாக பேசியுள்ளேன், நாளை அவரை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்" என மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கான பிரிட்டன் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஜேம்ஸ் க்ளவர்லி தம் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி இச்சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கூறியதாகவும், இருநாட்டு பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கரீனுக்கு அழைப்புவிடுத்திருப்பதாகவும் இஸ்ரேலின் பிரதமர் குழுவைச் சேர்ந்த ஓர் அதிகாரி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்