சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் இல்லாமல் பணம் செலுத்துபவர்களுக்கு கட்டணத்தை இரு மடங்காக மாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ரொக்கமாக பணம் செலுத்துவதால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க பாஸ்டேக் டிஜிட்டல் கட்டண முறை கொண்டு வரப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை இருந்தாலும் பலரும் ரொக்கமாகவே பணம் கொடுத்து கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரொக்க முறையை தவிர்த்து பாஸ்டேக் முறையை ஊக்குவிக்க இனி ரொக்கமாக கட்டணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் என்று விதிமுறைகள் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி பாஸ்டேகில் 100 ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டால் அதே கட்டணத்தை ரொக்கமாக செலுத்துபவர்களுக்கு ரூ.200 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல போன்பே, கூகிள் பே போன்ற டிஜிட்டல் செயலிகள் வழி பணம் செலுத்துபவர்களுக்கும் கால் பங்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நவம்பர் 15 முதல் இந்த முறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில் கூடுதல் கட்டணத்தை தவிர்க்க பலரும் பாஸ்டேக் முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K