ஸ்காட் மாரிசன் உண்மையாக இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா என பிரான்ஸ் அதிபரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு "எனக்கு தெரியும் என்று நான் கருதவில்லை" என பதிலளித்தார்.
ஆஸ்திரேலியா 37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 12 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு மக்ரோங் மிகவும் கடிந்து கொண்டார்.
அதே நேரத்தில், மாரிசன் நேர்மையாக இல்லை என்கிற கருத்தையும் மறுத்தார்.
செப்டம்பர் மாதம் இந்த பிரச்னை தொடங்கிய பிறகு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கும் ஜி20 உச்சி மாநாட்டில்தான் நேரடியாக சந்தித்துக் கொள்கின்றனர்.
மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசனை நம்புவீர்களா என அதிபர் மக்ரோங்கிடம் ஓர் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கேட்ட போது "அவர் என்ன செய்யவிருக்கிறார் என நாம் பார்ப்போம்" என பதிலளித்தார்.
"உங்கள் நாட்டின் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. உங்கள் நாட்டு மக்கள் மீது நிறைய மரியாதையும், நட்பும் உள்ளது. உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது, நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் அந்த மதிப்போடு சொன்ன சொல்படி நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
பிரான்ஸ் நாட்டுக்கான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு கசப்பான மோதலை உருவாக்கியது.
இந்த ஒப்பந்த ரத்து, "எங்கள் முதுகில் குத்தும் செயல்" என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர்களும் தற்காலிகமாக திரும்ப அழைக்கப்பட்டார்கள்.
மக்ரோங்கின் கருத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய மாரிசன், தான் அதிபர் மக்ரோங்கிடம் பொய் சொல்லவில்லை என்று கூறினார். மேலும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யாது எனவும் விளக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் நம்பிக்கை மற்றும் நட்புறவை மீண்டும் கட்டமைக்கும் பணிகளை இருநாடுகளும் தொடங்கியுள்ளதாகவும் கூறினார் மாரிசன்.
ஆக்கஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபர் மக்ரோங்கை முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்தார். அப்போது அமெரிக்கா ஆக்கஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் குளறுபடி செய்துவிட்டது என ஒப்புக் கொண்டார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
மூன்று நாட்டுத் தலைவர்களும், பருவநிலை மாற்ற மாநாட்டுக்காக அடுத்து கிளாஸ்கோ நகரத்துக்குச் செல்ல உள்ளனர். எனவே தங்களுக்கிடையிலான உறவை சரி செய்து கொள்ள நிறைய கால அவகாசம் இருக்கும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா வழங்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல் முறையாக அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்க ஆக்கஸ் ஒப்பந்தம் வழிவகுக்கும். செயற்கை நுண்னறிவு போன்ற பல முன்னணி தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு உடன்படிக்கை இது.
இந்த உடன்படிக்கை சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ பலத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆக்கஸ் ஒப்பந்தம் "மிகவும் பொறுப்பற்றது" என சீனா தன் கண்டனங்களை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.