நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தொங்கா நாட்டின் பிரதமர் பொஹிவ து'இ'ஒனெடோவா (Pohiva Tu'i'onetoa), தொங்கபது என்கிற முக்கிய தீவில் உள்ளவர்கள் அடுத்த வாரம் ஊரடங்கை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத சில நாடுகளில் தொங்காவும் ஒன்றாக இருந்தது. இந்த தீவு நாடு, நியூசிலாந்துக்கு வட கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தொங்கா தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் ஆயிரக் கணக்கானோர் தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்து வருவதாக அந்நாட்டின் தடுப்பூசி ஒருங்கிணைப்பாளரான அஃபு டெய் ஏ.எஃப்.பி முகமையிடம் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்ட தனி நபர், நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 215 பேரில் ஒருவர். அவரோடு தொங்கா நாட்டின் ஒலிம்பிக் வீரர்களும் பயணித்தனர். ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து அவ்வீரர்கள் அந்நகரத்தில் சிக்கிக் கொண்டனர்.
நியூசிலாந்தின் சுகாதார ஆமைச்சகமோ, அவர் தங்கள் நாட்டை விட்டு புறப்படும் முன் கொரோனா பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என்று வந்ததாக கூறியுள்ளது. ஆனால் தொங்கா நாட்டு அதிகாரிகளோ, கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாசிட்டிவ் உறுதியானதாக கூறியுள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர் அக்டோபர் மாத மத்தியில் தான் தன் இரண்டாவது கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார் என்றும், அவருக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தொங்கா நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சியாலெ அகஓலா பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு எதிராக தனக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தொங்கா நாட்டின் பிரதமர் பொஹிவ து'இ'ஒனெடோவா கூறினார். "காரணம் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் உடலில் வைரஸ் வளர்ந்து அவர் மூலம் கொரோனா மற்றவர்களுக்கு பரவ மூன்று நாட்கள் ஆகும்" என கூறினார்.
"நிறைய மக்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக, இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி, கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து உலகம் முழுக்க 24.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், 50 லட்சம் பேர் கொரோனாவால் இறந்து போனார்கள்.
இன்னமும் துவாலு போன்ற சில தீவு நாடுகளில் கொரோனா பரவவில்லை. வட கொரியா, துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று குறிப்பிடப்படவில்லை, அந்நாடுகள் அதிகாரபூர்வமாக கொரோனா விவரங்களை குறிப்பிடவில்லை என்றாலும், அந்நாடுகளில் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.