விண்ணுக்கு செல்லவுள்ள இந்தியாவின் பெண் ரோபோ என்ன செய்யும்?

வியாழன், 23 ஜனவரி 2020 (13:58 IST)
இஸ்ரோ நேற்று முதன்முதலாக 'வியோம் மித்ரா' என்ற பெண் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ 2021ஆம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில், ஆண் விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்யும்.
ககன்யான் திட்டத்தில் வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக வியோம் மித்ரா விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.
 
பெங்களூருவில் விண்வெளி பயணம் மற்றும் ஆய்வில் உள்ள தற்போதைய சவால்கள் மறும் எதிர்கால போக்குகள் என்னும் தலைப்பில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் வியோம் மித்ரா(வியோம் என்றால் சமஸ்கிருதத்தில் சொர்க்கம் என்று பொருள், மித்ரா என்றால் நண்பர்) அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 
"விண்கலத்தின் முக்கிய செயல்பாடுகளை கண்காணிப்பேன். உயிர் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதோடு, அது தொடர்பான முன்னெச்சரிக்கைகளையும் வழங்குவேன். நான் உங்கள் துணையாக இருப்பேன். விண்வெளி வீரர்களைக் கண்டறிந்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்," என்றது வியோம் மித்ரா.
 
"வியோம் மித்ரா விண்வெளி வீரர்களின் சந்தேகங்களை தீர்க்கும். இது விண்வெளி வீரர்களிடம் பேசி அவர்களின் தோழியாக இருக்கும். 'அலெக்சா' போன்று உளவியல் தொடர்பான விஷயங்களையும் இது கையாளும்," என்கிறார் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எஸ்.சோம்நாத்.
 
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே.சிவன், "ஆளில்லா விண்வெளி திட்டத்தில், சுற்றுச்சூழல் தொடர்பான பயன்பாட்டு அமைப்புகளை சோதனை செய்ய வியோம் மித்ரா ரோபோ பயன்படுத்தப்படும். மேலும் விண்வெளி வீரர்கள் செய்வதை இது செய்யும்," என பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"மாநாட்டில் காட்சிப்படுத்திய முதல்கட்ட திட்ட வடிவமைப்பு, உருவாக்க நிலையிலேயே உள்ளது. மேலும் இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். குரல்களை அடையாளம் கண்டுகொண்டு சில நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார் சோம்நாத்.
 
"இந்த ரோப்போக்களின் தோற்றம் வித்தியாசப்படலாம். ஆனால் இதற்கான அமைப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும். தற்போது எத்தனை உற்பத்தி செய்யப்படும் என்பதை கூற இயலாது. இந்த ரோபோக்கள், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உதவி புரியும் வகையில் இருக்கும்," என்கிறார் சோம்நாத்.
 
இந்திய விமானப்படையை சேர்ந்த நான்கு விமானிகளை தேர்வு இஸ்ரோ செய்துள்ளது. ககன்யான் திட்டத்திற்காக அனைவரும் தற்போது ரஷ்யாவில் பயற்சி எடுத்து கொண்டு வருகின்றனர்.
 
"இந்த ககன்யான் திட்டம் மூன்று கட்டங்களாக நடைபெறும்; டிசம்பர் 2020 மற்றும் 2021 ஜூன் மாதம் இரண்டு ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்படும். அதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்," என்று சிவன் இந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.
 
புதிய விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து மனித செயல்பாடுகள் அதிகரிப்பதையும் நாங்கள் இலக்காக வைத்திருக்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்