வீணாகும் உணவு : மொத்தம் 900 மில்லியன் டன்கள் குப்பைத்தொட்டியில்

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (13:34 IST)
உலகளாவிய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது.

கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுத்தியது.
அதில் 60% வீட்டில் நிகழ்கிறது.

பொதுமுடக்கம் ஒரு ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக தோன்றுகிறது. குறைந்தபட்சம் பிரிட்டனில் உணவு வீணாவது குறைந்துள்ளது.

மக்கள் தங்கள் ஷாப்பிங் மற்றும் உணவை மிகவும் கவனமாக திட்டமிட்டு வருகின்றனர் என்று இந்த அறிக்கையில் நீடித்த தொண்டு அமைப்பான ‘ராப்’(WRAP) தெரிவிக்கிறது. இந்த அமைப்பு ஐநாவுடன் கூட்டாக இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இதை தொடரும் ஒரு முயற்சியாக, உணவுப்பொருட்கள் வீணாவதைக்குறைக்கும் சமையலறை பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக நன்கு பிரபலமான சமையல் கலைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

'23 மில்லியன் உணவு ட்ரக்குகள்'

இந்த அறிக்கை உலகளாவிய பிரச்சினையை முன்னிலைப்படுத்தியுள்ளது. இது "முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிகப் பெரியது" என்று ராப் அமைப்பைச்சேர்ந்த ரிச்சர்ட் ஸ்வன்னெல் பிபிசி ந்யூஸிடம் தெரிவித்தார்.

"ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் 923 மில்லியன் டன் உணவு, 40 டன் சரக்கை ஏற்றக்கூடிய 23 மில்லியன் ட்ரக்குகளை நிரப்பும். அதாவது இந்த ட்ரக்குகளை ஒன்றுக்கொன்று தொடும்படி நிறுத்தினால், அது பூமியை ஏழு முறை வட்டமிட போதுமானது."

நுகர்வோர் தாங்கள் சாப்பிட முடிவதைவிட அதிகமாக வாங்குவது முன்னர் பணக்கார நாடுகளுக்கு மட்டுமேயான ஒரு பிரச்சனை என்று கருதப்பட்டது. ஆனால் "கணிசமான" அளவு உணவு, "எங்கு பார்த்தாலும்" வீணாகிறது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது.
.
குறைந்த மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளில் பிரச்சனையின் அளவு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை வெளிப்படுத்தக்கூடிய கண்டுபிடிப்புகளில் இடைவெளிகள் உள்ளன. உதாரணமாக இந்த அறிக்கையால் "தன்னிச்சையான" மற்றும் " தெரிந்தே" நிகழும் உணவு வீணாக்கலை வேறுபடுத்த முடியவில்லை.

"நாங்கள் இந்த பிரச்சினையை ஆழமாகப் பார்க்கவில்லை. ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், எரியாற்றல் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தால், குளிர் சேமிப்பு சங்கிலி முழுமையாக உறுதி செய்யப்படவில்லை" என்று யுனெப்பைச்(UNEP) சேர்ந்த மார்டினா ஓட்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.

எலும்புகள் மற்றும் மேல் ஓடுகள் போன்ற உண்ணமுடியாத உணவுகள் மற்றும் உண்ணக்கூடிய உணவுகள் ஆகிய இரண்டையும் வேறுபடுத்துவதற்கான தரவு, அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே கிடைத்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், சாப்பிடக்கூடிய உணவை மிகக் குறைவாகவே வீணடிக்கக்கூடும் என்று திருமதி ஓட்டோ சுட்டிக்காட்டினார்,

ஆனால் இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்த்தால், உலகம் "அந்த உணவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களையும் தூக்கி எறிந்து கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகமுக்கியமான உலகளாவிய பருவநிலை மற்றும் பல்லுயிர் சூழல் உச்சிமாநாடுகள் நடக்க இருக்கும் நிலையில், உணவு வீணாக்கலை எதிர்த்துப்போராடுமாறும், 2030 க்குள் அதை பாதியாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளுமாறும், யுனெப் நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் உலக நாடுகளை வற்புறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு, மாசு மற்றும் கழிவுகளை கையாள்வது குறித்து நாம் உண்மையில் தீர்வுகாண விரும்பினால், உலகெங்கிலும் உள்ள தொழில்நிறுவனங்கள், அரசுகள் மற்றும் குடிமக்கள், உணவு வீணாவதைக்குறைக்க தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

"வீணாகும் உணவு 8-10% பசுமைகுடில் வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகும். எனவே வீணாகும் உணவை ஒரு நாடு என்று நாம் வைத்துக்கொண்டால், அது இந்த பூமியில் பசுமைகுடில் வாயுவை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும்."என்று ரிச்சர்ட் ஸ்வன்னெல் சுட்டிக்காட்டினார்.

உணவு வீணாவதை குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்

*உங்கள் உண்ணும் அளவை திட்டமிட்டு சரியான அளவை வாங்கவும்: ஒரு குவளை((Mug)அரிசி, நான்கு பெரியவர்களுக்குப்போதுமானது. மேலும் 1p அல்லது £ 1 நாணயத்தைப் பயன்படுத்தி ஸ்பெகெட்டியின் ஒரு பகுதியை நீங்கள் அளவிடலாம்;

* உங்கள் குளிர்சாதன பெட்டியை மேலும் குளிர்விக்கவும்: சராசரியாக பிரிட்டனில் குளிர்சாதன பெட்டியின் தட்பநிலை கிட்டத்தட்ட 7 ° C ஆகும். இது 5 ° C க்கும் குறைவாக இருக்க வேண்டும்;

* தேதி லேபிள்களைப் புரிந்து கொள்ளுங்கள்: குறிப்பிட்ட தேதிக்குள் "பயன்படுத்துவது" என்பது உணவுப் பாதுகாப்பைப் பற்றியது. பயன்பாட்டு தேதி கடந்துவிட்டால், அது பார்க்கவும், நுகரவும் சரியாக இருந்தாலும்கூட நீங்கள் அதை சாப்பிடவோ அல்லது பரிமாறவோ கூடாது. பயன்பாட்டு தேதி நெருங்கி வந்தால், நீங்கள் அதை உறைய வைக்கலாம். ’குறிப்பிட்ட தேதிக்கு முன்’ பயன்படுத்தினால் சிறந்தது என்பது தரம் பற்றியது.

தாங்கள் சாப்பிடும் அளவிலான உணவை மட்டுமே வாங்குவதன் மூலம் பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 700 டாலர் சேமிக்க முடியும் என்று ராப் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

பொதுமுடக்கத்தின் விளைவு

கோவிட் 19 பொதுமுடக்கம், தெரிந்தே உணவை வீணாக்குதலை எப்படி தடுக்கமுடியும் என்பதற்கான பதிலையும் ஆச்சரியகரமாக வெளிப்படுத்தியது.

பொது முடக்கத்தின்போது, ​​திட்டமிடல், கவனமாக சேமித்தல் மற்றும் தொகுதிகளாக சமைத்தல் ஆகியவை காரணமாக 2019 உடன் ஒப்பிடும்போது மக்கள் உணவை வீணாக்குவது 22 % குறைந்தது என்று ராப் தெரிவிக்கிறது.

வீடுகளில் முடங்கிப்போன காரணத்தால், தொகுதிகளாக சமைத்தல் மற்றும் உணவு திட்டமிடல் போன்ற நடத்தைகள் அதிகரித்துள்ளன" என்று அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. "ஆனால் பொதுமுடக்கத்திலிருந்து நாம் வெளியே வரும்போது வீணாகும் உணவின் அளவு மீண்டும் உயரக்கூடும் என்று சமீப நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன."

அதைத் தவிர்ப்பதற்கான முயற்சியாக, பிரபல சமையல் வல்லுனர்களும், கலைஞர்களும் , சமையலறைகளில் உணவு வீணாவதை தடுக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தங்கள் பெயர்களையும் சுயவிவரங்களையும் வழங்கியுள்ளனர்.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி சமையல் கலைஞர் நதியா உசேன், ராப் அமைப்புடன் பணிபுரிகிறார். உதவிக்குறிப்புகள் மற்றும் மிச்சமான உணவுகளை வைத்து தயாரிக்கக்கூடிய சமையல் குறிப்புகளையும் இன்ஸ்டாகிராம் வழியாக அவர் வழங்குகிறார். இத்தாலியில், மொடெனாவில் உள்ள மூன்று மிச்செலின் நட்சத்திரங்களைக் கொண்ட இத்தாலிய உணவகம் ’ஓஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா” வை நடத்தும் மஸ்ஸிமோ போத்துரா, "உணவு வீணாக்கல் மற்றும் இழப்புக்கு” எதிரான போராட்டத்தில், யுனெப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியில் பொதுமுடக்கம் இருந்த காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினர், ”கிச்சன் க்வாரண்டீன்” என்ற ஆன்லைன் சமையல் நிகழ்ச்சியை வழங்கினார்கள். ஒவ்வொரு மூலப்பொருளிலும் இருக்கும் "கண்ணுக்குத் தெரியாத திறனைக் காண" மக்களை அவர்கள் ஊக்குவித்தனர்.

மில்லியன் கணக்கான டன் உணவு தூக்கி எறியப்படும் நிலையில், 2019 ஆம் ஆண்டில் 690 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு வீணாவதை தடுத்தால் பசுமை குடில் வாயு வெளியேற்றம் குறையும், நில மாற்றம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக நிகழும் இயற்கையின் அழிவு மெதுவாக்கும், உணவு கிடைப்பதை மேம்படுத்தி பசியை குறைக்கும். கூடவே உலகளாவிய மந்தநிலையின் போது பணத்தை மிச்சப்படுத்தும்" என்று திருமதி ஆண்டர்சன் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்