சசிகலாவின் அரசியல் விலகல் அமமுகவினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
செவ்வாய், 9 மார்ச் 2021 (14:35 IST)
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக அண்மையில் அறிவித்தது அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மத்தியில் முதலில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அதிலிருந்து மீண்டு வழக்கம் போல் தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த புதன் கிழமை சசிகலா யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தமக்கு பொது எதிரி திமுகவே என்றும் அக்கட்சியை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் அமைந்திட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், அந்த பொற்கால ஆட்சி அமைய தான் அரசியலிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு இணங்க நான்கு வருட சிறை வாழ்க்கை முடிந்து, விடுதலையாகி வரும் போது அமமுகவின் பெருவாரியான தொண்டர்கள் அவரை வரவேற்க வழிநெடுக இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தார்கள். அவரின் வருகை அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. ஆனால் அவரின் தற்போதய முடிவு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, "நாங்கள் மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து புறப்பட்டு சென்று 24 மணி நேரத்திற்கும் மேலாக சின்னம்மாவை வரவேற்க தமிழக எல்லையில் காத்திருந்தோம். அவர் வருகை எங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை தருவதாக இருந்தது. இந்த அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் இப்போது அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு தேர்தல் வேலைகளை பார்க்கத் தொடங்கிவிட்டோம்," என்றார்.
கட்சி அலுவலகங்களில் சசிகலா படங்களும் அவர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றன. அவர் என்னதான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் தொண்டர்கள் அவர் எப்படியும் திரும்ப வருவார், அதிமுகவை மீட்டெடுப்பார் என்றே நம்புகிறார்கள்.
"சின்னம்மா அவர்களின் இந்த முடிவு எங்களுக்கு சந்தேகமின்றி ஒரு பின்னடைவுதான். ஆனால் இதை வேறு கோணத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். டிடிவி அண்ணன் சின்னம்மா உள்ளே இருந்த போதுதான் கட்சியை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் அமமுகவிற்கு ஏற்கனவே இருந்த ஆதரவு அப்படியே இருக்கிறது. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் வந்து துரோகம் என்ற காரணியை சுட்டிக்காட்டி எங்களுக்காக வாக்கு கேட்கும் பட்சத்தில் பலம் கூடும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் திரும்பவும் அரசியலுக்கு வருவார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். அதனால் இப்போது அந்த முடிவை ஏற்று கட்சி வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்," என்று கூறுகிறார் அமமுகவின் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். பாஸ்கர சேதுபதி.
என்னதான் சசிகலா திமுகவை பொது எதிரி எனக் கூறினாலும் அமமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அதிமுகவிற்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் பாடம் கற்பித்து, தாங்களே உண்மையான அதிமுகவினர் என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வேலை செய்வதாகக் கூறுகிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஒருவர்.
அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் விரைவில் தங்கள் கட்சியில் வந்து சேரப்போவதாகக் கூறும் அவர், சசிகலாவின் அரசியல் விலகலைப் பற்றித் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் கேள்வி எழுப்பும் சில அபிமானிகளிடம் தேர்தல் வேலைகளில் முழு வீச்சாக ஈடுபட்டு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு வாக்கு சேகரிக்குமாறு வலியுறுத்துவதாகச் சொல்கிறார்.
இதுபற்றி தி இந்து நாளிதழின் திருச்சி பதிப்பகத்தின் முன்னாள் தலைமை நிருபரும் மூத்த பத்திரிக்கையாளருமான எஸ். சையத் முதஹர் கூறும்போது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலமும் 23 தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கியதன் மூலமும் வன்னியர் வாக்கு வங்கியை தக்கவைக்கும் முயற்சியை எடுத்துள்ளார். அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் சிதறாமல் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வரவேண்டுமெனில் சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா எண்ணினார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. அதனால் அழுத்தத்தின் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். இது ஒரு தற்காலிகமான முடிவே. அரசியலிலேயே புழங்கிய அவர் மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவார். ஆனால் தற்போது முக்குலத்தோர் வாக்குகள் முன்பு போல் அதிமுகவிற்கு கிடைக்குமா அல்லது அமமுக தான் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்று கூறினார்.