புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் முதலாவது விசாரணை இன்று தொடக்கம்

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (00:21 IST)
ஹாங்காங்கில் அறிமுகமான புதிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கின் முதலாவது விசாரணை இன்று தொடங்கியுள்ளது.
 
இதில் முதலாவது வழக்கை எதிர்கொள்பவர் 25 வயதாகும் டோங் யிங் கிட். அவருக்கு எதிராக தேச துரோகம், பயங்கரவாதம், ஆபத்தாக வாகனத்தை ஓட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடியை பறக்கச் செய்ததாகக் கூறி இவர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
 
ஆளும் அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே இந்த புதிய சட்டம் பாயும் என்று சீன பெருநில அரசு எச்சரித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஹாங்காங்கில் 2019ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய அளவிலான ஜனநாயக ஆதரவு போராட்டத்துக்குப் பிறகு இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
 
இந்த சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவிலான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. முதலாவது விசாரணயை எதிர்கொள்ளும் டோங் யிங் கிட், 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, தனது மோட்டார் சைக்களை, காவல்துறையினர் குழுவாக நின்றபோது அவர்கள் மீது மோதும் வகையில் ஓட்டியது தொடர்பானது. அந்த சம்பவத்தில் சில காவலர்கள் காயம் அடைந்தனர்.
 
மேலும், ஹாங்காங் சுதந்திர கொடியையும் அவர் தமது வாகனத்தில் பறக்கவிட்டிருந்தார். அதில் ஹாங்காங் சுதந்திரம், நமது வாழ்கால புரட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய சட்டத்தின்படி இத்தகைய செயல்பாடுகள் சட்டவிரோதமானது மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.
 
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் டோங் யிங் கிட்டுக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைக்கும். புதிய சட்டம் தொடர்பான வழக்குகளை ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நியமிக்கும் நீதிபதிகள் அல்லது மாஜிஸ்திரேட்டுகள் பிரத்யேகமாக விசாரிப்பார்கள்.
 
இந்த வழக்கு விசாரணை 15 வேலை நாட்களில் நிறைவு பெறும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்