மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கித் தந்த தமிழ்நாடு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:00 IST)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார். பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை விருதில் அடங்கும்.

யார் இந்த ஆசிரியர் ராமசந்திரன்?

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், திரவியம் ராஜ் என்ற மகனும் உள்ளனர். அவரது மகன் அவரது சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராமசந்திரன் தனது தொடக்கக் கல்வியை செம்பொன்குடி தொடக்கப் பள்ளியில் படித்தார். அதன் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருவரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு முயன்ற நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக மதுரையில் டீக்கடையில் வேலை செய்துள்ளார்.

அதன் பின் 2000ஆம் ஆண்டு முதல் 2002 வரை மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். பின்பு பணி கிடைக்காததால் மூன்று ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்துள்ளார்.

பின்னர் 2005-ல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் பணியில் இருந்து கொண்டே பிஎஸ்சி கணிதம், பி.எட், எம் எஸ் சி கணிதம் அனைத்தையும் படித்து முடித்தார்.

2006 ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். பிறகு, 2008ல் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு இப்போதுவரை அப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு அமைப்புகள் ஆசிரியர் ராமசந்திரன் சேவையை பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கியுள்ளன. மேலும், 2018ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை இவர் பெற்றுள்ளார்.

மாணவர்களுக்கு என்ன செய்தார் ராமச்சந்திரன்?

ராமசந்திரன் பணியாற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை 30 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராமச்சந்திரன் தன் சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஐசிடி (Information Communication Technology) தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

மேலும், டேப்லெட் மற்றும் மடிக்கணினி பயன்பாடு, பியானோ வாசிப்பு, சிலம்பம், ஓவியம், என மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரும் பயிற்சிகளை தருகிறார். பள்ளி வளாகத்தை பசுமையாக வைக்கும் வகையில் மூலிகை தோட்டம் அமைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த கல்வி திறன் மேம்பாட்டிற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி இப்பள்ளிக்கு இங்கிலாந்து நிறுவனம் ஐ.எஸ்.ஒ தரச் சான்று கொடுத்து கௌரவித்துள்ளது.

உறவு முறை கூறி அழைக்கும் மாணவர்கள்

ராமச்சந்திரன் தினமும் மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதுடன் இவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அவரை 'மாமா, சித்தப்பா, பெரியப்பா, மச்சான், மாப்பிள்ளை' என்று உறவு முறை வைத்து அழைக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் முடி திருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் ராமசந்திரன் நேரடியாக மாணவர்கள் வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு முடி திருத்தி விட்டுள்ளார். பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கும் கல்விக்கும் நீண்ட இடைவெளி ஏற்பட்டது.

எனவே ஆசிரியர் ராமசந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகன பாஸ் பெற்று காரில் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று மாணவர்களை ஒன்று திரட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்துள்ளார்.

கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு...

பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், 'மாணவர்களை எப்படி ஊக்கப்படுத்தி அவர்களுடன் எப்படி நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முதல் நோக்கம். அதன் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு கற்பிக்கிறேன்.


தினசரி பள்ளிக்கு நான் வருவதற்கு முன்பே மாணவர்கள் வந்து அவர்களுடைய வகுப்பறையில் உள்ள Projectorஐ ஆன் செய்து இன்றைய பாடங்களை அவர்களே Wifi மூலமாக கனெக்ட் செய்து வைத்திருப்பார்கள். நான் நடத்தவிருக்கும் பாடத்தை அவர்களுக்கு எளிதில் புரியும் படி கற்று கொடுத்து வருகிறேன்.

பொற்காசு திட்டம்

வாரம் ஒரு முறை மாணவர்கள் வாசிக்கும் திறன் மற்றும் நினைவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பொற்காசு திட்டத்தின் கீழ் நாணயங்களைப் பரிசாக வழங்குவேன். அந்த பரிசு நாணயங்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தனி உண்டியலில் மாணவர்கள் சேர்த்து வைத்து கொள்வார்கள்.

அப்படி சேகரிக்கும் நாணயங்களை எடுத்து மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், புத்தகம், நோட் உள்ளிட்டவற்றை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் இவ்வாறு சில திட்டங்கள் மூலம் மாணவர்களை ஒன்றிணைத்து இந்த கல்வி கற்றுக் கொடுத்து வருகிறேன்.

எனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டிலேயே நான் மட்டும் தேர்வாகி இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான வசதி செய்து கொடுத்ததின் அடிப்படையில் நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

எனது பணி காலம் முடியும் வரை கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு உலகத் தர கல்வியைத் தர முழுமையாக பாடுபடுவேன், மாணவர்களின் முன்னேற்றமே என்னுடைய இலக்கு' என்றார் ராமச்சந்திரன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்