ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. பிறகு அவை கட்டட விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப்போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும்.
ஊடகங்களால் 'இரட்டை கோபுரங்கள்' என்று இந்த இரண்டு கட்டடங்களும் அழைக்கப்படுகின்றன. அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட மாடிகள் உள்ளன.
ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகள் இந்தக் கட்டடங்களைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும். கட்டடம் அதற்குள்ளாகவே தகர்ந்து விழும்படியாக இதைச் செய்வதுதான் திட்டம், அது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். இதைச் சாத்தியப்படுத்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பொறியாளர் இதை "பொறியியலின் அழகிய சாதனை" என்றழைத்தார்.
இத்தகைய கட்டட இடிப்பு வேலைகள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. உலகம் முழுக்கவே இத்தகைய நடவடிக்கை அடர்த்தியான கட்டுமானங்கள் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படுவது அரிதாகவே நடக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமையன்று இதைச் செய்வது இந்த வேலையை இன்னும் சவாலாக்குகிறது.
இரட்டை கோபுரங்களின் இருபுறமும் சுமார் 7,000 பேர் வசிக்கின்றனர். கட்டடத்தில் இருந்து 30 அடி தொலைவிலேயே 12 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றும் உள்ளது.
இந்தக் கட்டடங்களில் உள்ள அனைத்து மனிதர்களும் வளர்ப்பு உயிரினங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்கிருந்து வெளியேற வேண்டும். வெடிகுண்டுகளை வைத்து இரு கட்டடங்களும் அவற்றுக்குள்ளாகவே இடிந்து விழும்படி வெடிக்க வைத்து ஐந்து மணிநேரம் கழித்து தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். தெருக்களில் சுற்றித் திரியும் உயிரினங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விலங்கு முகாம்களில் சேர்க்கப்படும். அப்பகுதியிலும் அருகிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த வெடிப்பு, 984 அடி உயரம் வரையிலான தூசு மேகத்தை உருவாக்கக்கூடும். ஆகவே, விமான நிலையங்கள் மற்றும் விமானப்படைக்கு, விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல. இந்தக் கட்டடங்கள் இடிக்கப்படவுள்ள இடத்திலிருந்து சுமார் 50 அடி தொலைவில் ஒரு நிலத்தடி குழாய் உள்ளது. இந்தக் குழாய் டெல்லிக்கு சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்கிறது.
கட்டடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதால் ஏற்படும் அதிர்வுகள் தங்கள் கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் என்று அருகிலுள்ள கட்டடங்களில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் இதுகுறித்துக் கவலைப்பட ஒன்றுமில்லை எனக் கூறுகின்றனர்.
நொய்டாவில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிக்க உதவும் பிரிட்டிஷ் பொறியாளர்கள், இந்தக் குண்டுவெடிப்பு அதிர்வுகளைத் தூண்டும் என்று கணக்கிட்டுள்ளன. இருப்பினும் அந்த அதிர்வு, நிலநடுக்கத்தை அளக்கக்கூடிய ரிக்டரில் மதிப்பிடப்படும் நான்கு என்ற அளவில் பத்தில் ஒரு பங்கு தான் இருக்கும் என்கின்றனர். மேலும், "இரட்டை கோபுரங்களின்" அடித்தளங்கள் அதிர்வுகளை உறிஞ்சுவதற்கு ஏற்ப தளர்ந்த கட்டுமானக் கழிவுகளால் அடைக்கப்படும்.
"இது முற்றிலும் பாதுகாப்பானது" என்கிறார் மூத்த பொறியாளர் மயூர் மேத்தா.
ஞாயிற்றுக்கிழமை, இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தப்போகும் மூன்று பேர், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஆறு பேர், குண்டுவெடிப்பு நிகழப்போகும் "விலக்கு மண்டலம்" என்றழைக்கப்படும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர்.
வெடிபொருட்களின் கவலையைப் பயன்படுத்தி கட்டடத்தைத் தகர்ப்பதற்கான வெடிப்பு தூண்டப்படும். மில்லிசெகண்ட்ஸ் கால அளவில் டெட்டனேட்டர்கள் மூலம் வெடிப்பு தூண்டப்படும். அதற்கான சிக்னல் பிளாஸ்டிக் குழாய்களின் வழியாக ஷாக் வேவ்களின் மூலம் கொண்டு செல்லப்படும்.
"இதுவோர் எளிதான வெடிப்பு நிகழ்வாக இருக்கப் போவதில்லை," என்கிறார், டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குதாரர் உத்கர்ஷ் மேத்தா. அவர், "நாங்கள் உண்மையில் 30 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் 19 மாடிகளை வெடிக்கச் செய்வோம். மீதமுள்ளவை தாமாகவே தகர்ந்துவிடும். நாங்கள் அதை 'நீர்வீழ்ச்சி வெடிப்பு' என்று அழைக்கிறோம். இதற்கு புவியீர்ப்பும் உதவுகிறது," என்றார்.
பல வாரங்களாக, "பிளாஸ்டர்கள்(வெடிகுண்டை வெடிக்க வைப்பவர்கள்)" இரண்டு கட்டடங்களின் 30 மாடிகளில், வெடி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வெடிபொருட்களுக்கு இடையே, 20,000-க்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பொருத்துவதையும் வெடிபொருட்களை வெவ்வேறு மாடிகளில் பொருத்துவதையும் அவர்கள் உறுதி செய்தனர். கட்டடங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எஸ்கலேட்டர்களின் செயல்பாடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் நடக்கும் ஒரு மிகச்சிறிய தவறு கூட இந்த வெடிப்பு நிகழ்வை முழுமையாக நடக்க விடாமல் போகலாம்.
இருப்பினும், 11 ஆண்டுகளாகச் செயல்படும் மேத்தாவின் நிறுவனத்திற்கு பொறியியல்ரீதியாக இது மிகவும் சவாலான வேலையாக இருக்காது. உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியை இந்தியா முடுக்கிவிட்டுள்ள நிலையில், பழைய விமான நிலைய முனையங்கள், கிரிக்கெட் மைதானங்கள், பாலங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மையான எஃகு ஆலைகளில் உள்ள பழைய தொழில்துறை புகைப்போக்கிகள் உட்பட 18-20 கட்டமைப்புகளைத் தகர்த்துள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறுகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக பிகாரில் கங்கை நதியின் மீதிருந்த பழைய பாலத்தை இடித்தது, இவற்றில் மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று. அந்த இடிபாட்டின் குப்பைகள் எதுவும் பாலத்திற்குக் கீழிருந்த நதியில் விழக்கூடாது என்பதை பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை "இரட்டைக் கோபுரங்கள்" கீழே விழுந்த பிறகு, 30,000 டன் கட்டுமான குப்பைகள் குவியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடு நிகழும்போது, அந்தக் குப்பைகள் சிதறி மக்களையோ அல்லது கட்டடங்களையோ சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக, இடிக்கப்படவுள்ள இரு கட்டடங்களையும் சுற்றி வலையமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 1,200 லாரிகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது அங்கிருந்து குப்பைகளை மறுசுழற்சி ஆலைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். "தூசு விரைவில் படிந்துவிடும். ஆனால், குப்பைகளை அகற்ற சற்று நேரம் எடுக்கும்," என்கிறார் மேத்தா.
இந்தியாவில் வானளாவிய கட்டடங்களை இடிப்பது எளிதானதல்ல. 2020ஆம் ஆண்டு, கேரளாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமார் 2,000 பேர் வசித்த இரண்டு ஏரிக்கரை சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை, அதிகாரிகள் தகர்த்தார்கள். ஆனால், அதைவிட நொய்டாவில் மேற்கொள்ளப்படும் கட்டட இடிப்புகளின் அளவும் அவை உருவாக்கியுள்ள மனப் பதற்றங்களும் முன்னெப்போதும் காணாதவை.
அதற்கு அருகிலுள்ள கட்டடங்களில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே தங்கள் வீடுகளை விட்டு நகரத்திலுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்குவதற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
"மக்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கிறார்கள். தங்களுடைய குளிரூட்டல் பெட்டிகளை மூடி வைக்கிறார்கள். சுவர்களில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கழற்றுகிறார்கள். நாங்கள் அந்தக் கட்டடங்களைப் பூட்டுகிறோம். இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை," என்று இரட்டை கோபுரங்களுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தின் அன்றாட விவகாரங்களுக்கான நிர்வாக சங்கத்தின் தலைவர் எஸ்.என்.பைரோலியா கூறுகிறார்.
வானளாவ உயர்ந்துள்ள கட்டடங்கள் ஒருகாலத்தில், வருங்கால வாங்குவோருக்கான கலப்படமற்ற ஆடம்பர வாழ்வுக்கான உறுதியை வழங்கின. தனியார் டெவலப்பரான சூப்பர்டெக், சியான் 37 மாடிகள் உயரமான கட்டடமாக, ஒரு 'சின்னமாக' இருக்கும் என்றும் ஏபெக்ஸ் பால்கனியில் நின்று பார்த்தால் "பளபளக்கும் நகரம்" கீழே தெரியும் என்றும் உறுதியளித்தது.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று, அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இடிபாட்டின் தூசுக்குள் மூடப்படும்.