டி20; இந்திய அணியை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (22:50 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஜாஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேலின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

 
‘மோசமாக ஆடிய இந்தியா’
 
இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 
அதில், “இந்தியாவுக்கு இது ஒரு மோசமான தோல்வி. அவர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.

 
இந்தியா மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவதற்கு இந்திய அணியில் யாரும் இல்லை” என கூறியுள்ளார்.
 
 
“இந்தியா பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. ரோஹித், கே.எல் ராகுல் இருவராலும் முதல் 6 ஓவர்களில் அதிரடி காட்ட இயலவில்லை. டி20 போன்ற ஆட்டங்களில் அதிரடியாக ஆடுவது அவசியம்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சனும் குறிப்பிட்டுள்ளார்.

 
இதேபோல, “இந்திய அணியை ஹர்திக் தூக்கி நிறுத்தினாலும், 6 - 8 ஓவர்கள் முன்கூட்டியே அந்த அதிரடி நிகழ்ந்திருக்க வேண்டும். பெரிய ஆட்டங்களில் ரோஹித் - ராகுல் இருவராலும் சரியாக விளையாட முடியாதது விராட் கோலிக்கும் - சூர்யகுமாருக்கும் நெருக்கடி அளிக்கிறது. எத்தனை முறைதான் அவர்களே ரன் குவிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியும்,” என்கிறார் முன்னாள் இந்திய வீரரும் அணித் தேர்வருமான சரந்தீப் 

 
இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதன், இந்தியா செய்த தவறுகளில் ஒன்று பேட்டிங் பவர்பிளேவை சரியாக பயன்படுத்தாதது என குறிப்பிட்டார்.

 
“ஆடுகளத்தில் பவுண்டரி விளாசுவதற்கான தொலைவு குறைவாக இருந்தபோதும் தொடக்கத்தில் இந்தியா மிகவும் மெதுவாக பேட்டிங் ஆடியது. பவர் பிளேவை இந்தியா பயன்படுத்தியிருக்க வேண்டும். முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் வரை குவித்திருக்க வேண்டும். 2வது பாதியில் அதிக ரன்கள குவிக்கலாம் என வீரர்கள் நினைத்தனர்.

 
அதுதான் நடந்தது என்றாலும் வெற்றிக்கு அது போதியளவில் உதவவில்லை. அதேசமயம், இங்கிலாந்து அணி பவர்பிளேயில் எப்படி ஆட வேண்டும் என்பதை காட்டியது.

 
முதல் 6 ஓவர்களில் கணிசமான ரன்களை சேர்த்தது. சிறிய அணிகளுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் பவர் பிளேயில் ரன்களை சேர்த்து ஓரளவு சமாளித்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் வெளிப்பட்டுவிட்டது," என்கிறார் கிஷோர் வைத்தியநாதன்.

 
"முதல் 6 ஓவர்களில் கணிசமான ரன்களை சேர்த்தது. சிறிய அணிகளுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் பவர் பிளேயில் ரன்களை சேர்த்து ஓரளவு சமாளித்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் வெளிப்பட்டுவிட்டது, என்கிறார் கிஷோர் வைத்தியநாதன்.

 
‘சாஹலை பயன்படுத்த தவறியது’
 
“டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக சாஹல் ஒரு ஆட்டத்தில் கூட களமிறங்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

 
ஆஸ்திரேலியா போன்ற பெரிய ஆடுகளங்களில் சாஹல் பந்துவீச்சில் பெரிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விரிஸ்ட் ஸ்பின்னர்களை ஒப்பிடும்போது, ஃபிங்கர் ஸ்பின்னர்ஸ் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவ்வளவாக சோபித்ததில்லை.

 
மற்ற அணிகளில் ஒன்றுக்கு இரண்டு விரிஸ்ட் ஸ்பின்னர்களை பயன்படுத்தினர். ஆனால் இந்தியா பயன்படுத்தாது ஆச்சரியம் அளிக்கிறது. டி20 போட்டிகளில் விக்கெட் டேக்கர் அணியில் இருப்பது மிகவும் அவசியம்.

 
பும்ரா இல்லாத இடத்தில், சாஹல் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை," என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதன்

 
இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.

 
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இங்கிலாந்து போன்ற ஒரு தலைசிறந்த அணியை எதிர்கொள்ள இந்திய அணியிடம் சரியான திட்டமிடல் இல்லை. மெல்போர்னை விட சிறிய மைதானத்தில் ஆடும் போது குறைந்தது 190 ரன்களாவது தேவை.

 
முதல் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினாலே போதுமானது. கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மாவிடம் அரையிறுதியில் விளையாடுகிறோம் என்கிற பொறுப்புணர்வு இல்லை.

 
ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவானையாவது அணியில் எடுத்திருக்கலாம். அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரும் பின்னடைவை தந்திருக்கிறது. பெரிய தொடரில் பங்கேற்பதற்கு முன் குறிப்பிட்ட வீரர்களுக்கு முறையாக ஓய்வளிக்க வேண்டும்.

 
பணம் கொழிக்கும் பிசிசிஐ போன்ற கிரிக்கெட் வாரியம் உள்ள நாட்டில், வீரர்கள் ஐபிஎல்-ல் ஆடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நாட்டிற்காக விளையாட வேண்டிய முக்கிய போட்டிகளில் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.

 
"ரிஷப் பண்ட்-ஐ களமிறக்காமல், தினேஷ் கார்த்திக்கை மட்டும் வைத்து போட்டியை எதிர்கொண்டிருக்க வேண்டும் எனக்கூறிய ஹாரிங்டன், "போட்டியை தோற்றாலும் சர்வதேச டி20 ஆட்டங்களில் 4,000 ரன்களை கடந்த விராட் கோலி பாராட்டப்பட வேண்டியவர்," என தெரிவித்தார்.
 
“டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விராட் கோலி, சூர்யகுமார் இருவரின் ஆட்டத்தை மட்டுமே நம்பியிருந்தது. இருவருக்கும் அதிகப்படியான அழுத்தங்களை வழங்குவது தவறு. விராட் கோலியை போன்று எதிர்காலத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களை இந்திய அணி உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

 
பாகிஸ்தானை போன்ற வேகப்பந்துவீச்சு இந்தியாவிடம் இல்லை என்பது உண்மை. ஐபிஎல் போன்ற தொடர்களில் துல்லியமாக வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு முறையான பயிற்சியுடன் வாய்ப்பு வழங்க வேண்டும்.

 
இந்தியாவின் தோல்வி விமர்சிக்கப்பட்டாலும் அதில் இருந்து பாடம் பயில வேண்டும். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி ஒரு சிறந்த கிரிக்கெட்டை ஆடியிருக்கிறது.

 
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு அத்தனை தகுதிகளும் உள்ளன” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.
 
 
வரும் ஞாயிறுக்கிழமை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்