அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை போலீஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வீட்டை வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் போலீஸார் கூறினர். ஐ.எஸ் அமைப்பினரின் கொடியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதனுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்று, வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி முதல் நாளை, சனிக்கிழமை, காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சவலக்கடை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் மட்டும் மீள் அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.