டிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (19:11 IST)
டொனால்ட் டிரம்பு
 
2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு ஆணையத்தின் தலைவர் ராபர்ட் மல்லர் சமர்பித்துள்ளார்.
இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், நாடாளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார்.
 
மேலதிக குற்றச்சாட்டு எதையும் மல்லரின் இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை என்று நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
 
அதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், டஜன்கணக்கான ரஷ்யர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது.
 
வார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக நாடாளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார்.
 
அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டையினால் நியமிக்கப்பட்டு 22 மாதங்களாக நடைபெற்ற இந்த சிறப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகளை இந்த அறிக்கை விளக்குகிறது.
 
அதிபர் டிரம்பும், பிற குடியரசு கட்சியினரும் இந்த விசாரணையை "சூனிய வேட்டை" என்று கண்டித்துள்ளனர்.
செனட் அவை உறுப்பினர்கள் லிண்ட்சே கிரஹாம், டியானி ஃபெய்ஸ்டெயின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்டு நாடெல்லர், டக் காலின்ஸ ஆகிய நாடாளுமன்ற நீதித்துறை குழுவின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மல்லரின் விசாரணையின்போது நீதித்துறை தலையிடவில்லை என்பதை வில்லியம் பார் உறுதி செய்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் சிறப்பு விசாரணை கவுன்சிலின் தலைவர் ராபர்ட் மல்லர் (வலது)
வில்லியம் பாரை நியமிக்கும் முன்னர் இந்த விசாரணையை நடத்தி வந்த துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டைனோடும், மியூலரோடும் நடாளுமன்றத்திடமும், பொது மக்களிடமும் எந்தெந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கலந்துரையாட போவதாக வில்லியம் பார் கூறியுள்ளார்.
 
"எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு வெளிப்படையாக நான் இருப்பேன். என்னுடைய மதிப்பீட்டை உங்களுக்கு தெரிவிப்பேன்," என்று அவர் கூறியுள்ளார்.
 
அமெரிக்கர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும் தேர்தல் பரப்புரையையும், அமெரிக்காவில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு வழங்கவும், ஹிலாரி கிளிண்டனின் பரப்புரையின் தாக்கத்தை குறைக்கவும் ரஷ்ய முகவர்களும், உளவாளிகளும் எடுத்த முயற்சிகளை கடந்த 22 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.
 
ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையை விமர்சித்த டிரம்புக்கு கடும் எச்சரிக்கை
பெடரல் உளவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியில் இருந்து நீக்கியது, விசாரணையை தவறாக வழிநடத்துவது அல்லது முடிக்க முயற்சிப்பதன் மூலம் நீதியை நிலைநாட்ட அதிபர் டிரம்ப் தடையாக இருந்தாரா என்பது பற்றியும் மல்லர் விசாரித்து வருகிறார்,
 
ரஷ்யாவுடன் எந்தவொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்நாட்டினால் எந்த தடையும் ஏற்படவில்லை என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
 
இந்த விசாரணையின்போது புலனாய்வு குழுவின் கேள்விகளுக்கு விடையளிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை.
 
பல மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, கேள்விகளுக்கு விடை எழுதி அதிபர் டிரம்பின் வழங்கறிஞர்கள் சமர்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்