இருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் - போராடும் மக்கள்; முரண்டு பிடிக்கும் அதிபர்
சனி, 9 மார்ச் 2019 (11:20 IST)
அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு எதிராக போராடும் அல்ஜீரியர்கள் தலைநகர் அல்ஜீரஸ் மற்றும் பிற நகரங்களில் பெரியளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலையை போராட்டக்காரர்கள் சென்றடைவதை தடுக்கும் விதமாக கலவர தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படைப்பிரிவுகளால் சுமார் 200 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெற்றவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா எடுத்த முடிவுக்கு எதிராக இந்த போராட்டங்கள் கடந்த மாதம் தொடங்கின.
சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவை ஆண்டு வருகிறார். ஆனால், 2013ம் ஆண்டு பக்கவாதம் வந்த பின்னர் பொதுவெளியில் அவர் தோன்றவில்லை.
இந்த போராட்டங்கள் நாட்டை குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
எனினும், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் முழு பதவி காலமும் பதவியில் இருக்கமாட்டேன் என்றும், புதிய தேர்தலை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அப்தலசீஸ் அறிவித்துள்ளார்.
அல்ஜீரியாவில் தற்போதைய அதிபராக இருக்கும் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவுக்கு வயது 82. வயது மூப்பின் காரணமாகவும், 2013-ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாகவும் அப்தலசீஸை பொது இடங்களில் பார்ப்பது என்பது மிகவும் அரிதாக உள்ளது.
ஏற்கனவே, நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ள அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றவுள்ள தேர்தலில் ஐந்தாவது முறையாக போட்டியிடக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிபர் முன்வைக்கும் தீர்வும், மீண்டும் வெடித்த போராட்டமும்
அல்ஜீரியாவை புரட்டிப்போடும் அளவுக்கு நடைபெற்று வரும் தனக்கு எதிரான போராட்டங்களை கண்ட அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று 10 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
எனினும் தான் ஐந்தாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முழு பதவி காலமும் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என்றும், தான் போட்டியிடாத புதிய தேர்தலை நடத்துவதற்குரிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இருந்தபோதிலும், அப்தலசீஸின் இந்த சமரச கருத்தை ஏற்க மறுத்த பல்லாயிரக்கணக்கான அல்ஜீரிய மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
அன்றைய தினமே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் அப்தலசீஸ் போட்டியிடுவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சட்டப்படி அல்ஜீரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டியது அவசியம். இதனால், தற்போது அப்தலசீஸ் சுவிட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவர் மனுத்தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தது.
எனினும், இதுதொடர்பாக விசாரணை நடத்திய அல்ஜீரியாவின் அரசமைப்பு குழு, அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்தது.
இந்நிலையில், மக்களின் போராட்டத்தையும் மீறி அப்தலசீஸ் பூத்தஃப்லீக்காவின் சார்பாக அவரது தேர்தல் பரப்புரை குழுவின் மேலாளர் இந்த மனுத்தாக்கலை செய்துள்ளார்.
அல்ஜீரியாவை பொறுத்தவரை மக்கள் பொதுவெளிக்கு வந்து ஒன்றாக போராடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று.
அல்ஜீரியாவின் அதிபராக அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா பதவி வகித்து வரும் 20 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய போராட்டம் இதுவே.
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் பதவியை ஏற்ற அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, அந்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்க காரணமான உள்நாட்டு போரை முடிவு கொண்டுவந்தவராக அறியப்படுகிறார்.
நாட்டை நெடுங்காலமாக ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் 2010ஆம் ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் நடந்த கிளர்ச்சியின் தாக்கம் அல்ஜீரியாவிலும் இருந்தது.
அல்ஜீரியாவை பொருத்தவரை உணவுப்பொருள் விலையுயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான இரண்டு தசாப்தகாலமாக நடைமுறையில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை அப்தலசீஸ் முடிவுக்கு கொண்டுவந்தார்.
நோயின் தீவிரத்தன்மையின் காரணமாக அப்தலசீஸினால் சரிவர அரசு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.