டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை
வெள்ளி, 8 மார்ச் 2019 (12:51 IST)
வரி மற்றும் வங்கி மோசடி தொடர்பாக நடந்த விசாரணையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளரான பால் மானஃபோர்ட்டுக்கு 47 மாத சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உக்ரைனில் அரசியல் பிரச்சாரகராக செயல்பட்டதன் மூலம் கிடைத்த மில்லியன்கணக்கான வருமானத்தை மறைத்தது தொடர்பான வழக்கில், மானஃபோர்ட் சென்ற ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பால் மானஃபோர்ட் மீதான சட்டவிரோதமான கூட்டு நடவடிக்கை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கும், ரஷ்யாவுக்கும் தொடர்புள்ளதா என்று எழுந்த சந்தேகங்களின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த வழக்கின் விசாரணை கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தண்டனை விவரம்
பால் மானஃபோர்ட்டுக்கு 47 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சட்டவிரோதமாக பெற்ற 24 மில்லியன் டாலர்களை திரும்ப தருவதுடன், 50 ஆயிரம் டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அமெரிக்க நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பேசிய பால் மானஃபோர்ட், "கடந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்வின் கடினமான காலகட்டமாக அமைந்ததுடன், எனது தொழில்ரீதியிலான வாழ்க்கை மொத்தமாக சீர்குலைந்துள்ளது" என்று கூறினார்.
அதிபர் டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு சிறை
"நான் மிகவும் வெட்கப்படுவதுடன், அவமானகரமாகவும் உணருகிறேன்" என்று மேலும் கூறிய அவர், நீதிபதிகளிடம் 'கருணை' காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பால் மானஃபோர்ட் தான் 'தவறான செயற்பாட்டில் ஈடுபட்டதற்காக வருத்தத்தை தெரிவிக்காதது' தன்னை வியப்பில் ஆழ்த்துவதாக நீதிபதி எல்லிஸ் கூறினார்.
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் விசாரணையில் இருந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முன்னதாக, மான்ஃபோர்டும் அவரது வணிக கூட்டாளியான ரிக் கேட்ஸும், உக்ரேனில் பதிவு செய்யப்படாத முகவர்களாகச் செயல்பட்டு லட்சக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்ததை மறைத்ததாகக் குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.
உக்ரைன் அரசியல்வாதி விக்டர் யானுகோவிச் மற்றும் அவரது கட்சிக்கும், மான்ஃபோர்டும், கேட்ஸும் பதிவு செய்யப்படாத முகவர்களாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
ரஷ்ய ஆதரவு கொள்கைகளால், 2014-ம் ஆண்டு விக்டர் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.
வெளிநாட்டு வங்கிக்கணக்கு மூலம் மான்ஃபோர்ட் 18 மில்லியன் டாலர் பணமோசடி செய்து, அதன் மூலம் சொத்துக்களையும் பொருட்களையும் வாங்கியது அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
உக்ரைனில், ரஷ்ய ஆதரவு அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மான்ஃபோர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, டிரம்பின் பிரசார மேலாளர் பதவியில் இருந்து 2016 ஆகஸ்ட் மாதம் அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.