மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ரோபோ

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (14:50 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: "மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ரோபோ"

மும்பை மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து ரோபோ மூலம் வழங்கப்படுவதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி மேலும் விவரிக்கையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும்மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அந்த நோய்தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முழு உடல் கவச உடைகளை அணிய வேண்டி உள்ளது.

இதையும் தாண்டி அவர்களை கொரோனா தொற்று தாக்கி வருகிறது. மேலும் முழு உடல் கவச உடைகளை கழற்றாமல் பணிபுரியும் சூழல் உள்ளதால் அவர்கள் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் மும்பை ஒர்லியில் உள்ள பொடார் தனியார் மருத்துவமனையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வார்டில் ரோபோ டிராலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரோபோ டிராலி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் இருந்து மருந்துகளை கொடுக்கும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விலகியிருக்க முடியும்.

மேலும் அவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்தும் குறையும் என முதல்வர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோபோ டிராலியின் காணொளியும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை - "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டி.வி.சேனல்கள் மூலம் வகுப்புகள்"

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் டி.வி. சேனல்கள் மூலம் வரும் 13-ம் தேதிக்குப் பிறகு வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளேடு தெரிவித்துள்ளது.
''பள்ளி மாணவர்களில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு எழுதாதவர்கள், பள்ளிக்கு வராதவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. கல்வியாளர்களுடன் ஆலோசித்தபின்பு இவர்களின் தேர்ச்சி குறித்து முதல்வர் அறிவிப்பார்.


கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பழைய பாடத்திட்டமே தொடரும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் 5 டி.வி.சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்.

பிளஸ் 2 கடைசித் தேர்வை 34,482 மாணவர்கள் எழுதவில்லை. இதில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளித்துள்ளனர். விருப்பம் தெரிவிக்காதவர்களும் தேர்வு எழுதலாம்.
நீட் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ள நிலையிலும், தொடர்ந்து அரசு சார்பில் 7,500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி விவரித்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:"3 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய சர்வதேச கிரிக்கெட்"

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் மீண்டும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே சவுதாம்ப்டனில் நேற்று (ஜூலை 8) தொடங்கியது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ளது.

முதல் நாளான நேற்று மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்த அந்த செய்தி மேலும் இது குறித்து விவரித்துள்ளது.

முதல்நாள் ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக டாஸ் போடுவதற்குத் தாமதம் ஏற்பட்டது. விடாது பெய்த மழையால், உணவு இடைவேளைக்குப் பின் போட்டி ஆரம்பித்தது.

டாஸ் போடுவதற்கு இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்குள் நுழைந்ததும் மீண்டும் மழை குறுக்கிட்டது.

நீண்ட நேரமாக மழை நீடித்ததால் டாஸ் போடுவதற்கு முன்பே உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை முடிந்தபின் மழை நின்றதால் மைதானம் தயார் ஆனது.
பின்னர் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், இருநாட்டு அணியினரும் 'கறுப்பின மக்களின் வாழ்விற்கு மதிப்பு அளிக்க வேண்டும் ' என்று அச்சிடப்பட்ட டீ-சர்ட்டை அணிந்தனர்.

சரியான வெளிச்சம் இல்லாததாலும், மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாகவும் முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் 20 ரன்களுடனும், ஜோ டென்லி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்று அந்த செய்தி விவரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்