கொரோனா வைரஸ்: வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (16:34 IST)
புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி அவசர அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 
 
இதில் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவுக்காக நிதி ஒதுக்குவது, போதுமான மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
 
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டைபோட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர். மக்களின் இத்தகைய செயல் மிகவும் வேதனை அளிக்கிறது.
 
மேலும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கூட்டு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்,
 
புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்குத் தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவியும் கோரப்படும்," என்றார். தொடர்ந்து பேசி முதல்வர், " நாளை முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை மருந்தகங்களைத் தவிர அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்