தயாரிப்பாளர் - கதாநாயகன் - தி.மு.க இளைஞரணி செயலாளர் - உதயநிதி ஸ்டாலின் கடந்துவந்த பாதை

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (19:34 IST)
தி.மு.கவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

 
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இளைஞரணித் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த ராஜினாமா குறித்து அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த நியமன உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு
 
1977ல் பிறந்த உதயநிதி ஸ்டாலின் டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிக்கல்வியையும் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பையும் முடித்தார்.
 
இதற்குப் பிறகு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்களைத் தயாரித்துவந்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கிருத்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
 
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி ஏதேனும் அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், வெள்ளக்கோவில் சாமிநாதன் தான் வகித்துவந்த இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதையடுத்து, பல மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக்க வேண்டுமெனக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தலைமைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், இந்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
 
தி.மு.கவின் இளைஞரணி என்பது 1980ல் மதுரையில் உள்ள ஜான்சி ராணிப் பூங்காவில் ஒரு அமைப்பாகத் துவங்கப்பட்டது. இதன் அமைப்பாளர்களில் ஒருவராக அந்தத் தருணத்தில் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
 
இதற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென அமைப்புகளை உருவாக்கினர். அதற்குப் பிறகு மாநில அளவில் அதன் செயலாளராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்