இலங்கை போராட்டத்தில் இணைந்த போலீஸ் அதிகாரி: "என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்"

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:50 IST)
(இன்றைய (ஏப்ரல் 15) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)
 
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து, கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
போராட்டக்காரர்களுடன் இணைந்த அவர், அங்கு பேசியபோது, "இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.
 
நாளை என்னை வேலையிலிருந்து நீக்க போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்", என்றார்.
 
மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
 
அவர் போராட்டக் களத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகில் கடமையாற்றிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தலையிட முயற்சி செய்தார். ஆனால் அவரை பின்னுக்குத் தள்ளிய போராட்டக்காரர்கள், அங்கிருந்து வெளியேறுமாறு கூறி, அவரை திருப்பி அனுப்பினார்கள்.
 
சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டாலரை எதிர்பார்க்கும் இலங்கை
 
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கை சுமார் 4 பில்லியன் டாலர் நிதியுதவியை பெற எதிர்ப்பார்ப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக 'வீரகேசரி' செய்தி வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை தூதுக்குழு இந்த வார இறுதியில் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது.
 
நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சரின் செயலாளர் கே.எம்.எம் சிறிவர்தன ஆகியோரும் உள்ளனர்.
 
இந்த தூதுக்குழு வாஷிங்டன் நகரில் 5 நாட்கள் தங்கியிருந்து இலங்கை பொருளாதாரம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
 
21 விமானங்களை நீண்ட கால குத்தகைக்கு கோரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக 'தமிழன்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
 
21 விமானங்களுக்காக நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது. அது தற்போது 24 ஆக குறைந்துள்ளது. அத்துடன், குத்தகைக் காலம் நிறைவடைந்து வரும் விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
ஏ330-200 அல்லது ஏ330-300 ரகங்களைச் சார்ந்த 10 ஏர்பஸ்களையும், ஏ320 அல்லது ஏ321 ரகங்களைச் சார்ந்த 11 ஏர்பஸ்களையும் 6 ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்