நிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (00:03 IST)
(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
 
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால், தமிழக கடலோர மாவட்ங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
 
மணிக்கு சுமார் 40 முதல் 60 கி.மீ வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று வீசும் என்ற எச்சரிக்கையால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, தொண்டி, மூக்கையூர் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நேற்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்குவதை மீன்வளத்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதால் இன்று இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 
பாம்பன்
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். நாளை மாலைக்குள் நிவர் புயல் கரையைக்கடக்கும் என்பதால் பாம்பன் துறைமுகத்தில் நேற்று (திங்கள்கிழமை) முதல் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
பாம்பன் வடக்கு மற்றும் தென் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் புதிய ரயில் பாதைக்கான கட்டுமான உபகரணங்கள் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளன. மேலும் கரையோர பகுதியில் அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட குடிசைகள் மீன் கம்பெனிகள் முற்றிலும் சேதமடைந்து கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது மீன் பிடி சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர்.
 
பாம்பன்
பாம்பன் பாலத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கால மீட்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 429 ஊராட்சிகளில் மாவட்ட நிர்வாகம்,காவல் துறை, சுகாதாரத்துறை,தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 3500 ஊழியர்கள் 135 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
 
தாழ்வான பகுதிகள்,மழை நீர் மற்றும் கடல் நீர் சூழும் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகள் சாலை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்டம் முழுவதும் 32 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உணவு,மருத்துவம்,குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளுடன் 24மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், பேரிடர் பாதிப்பு குறித்து 1077 மற்றும் 04567-230067 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடி
படக்குறிப்பு,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி
 
தூத்துக்குடியில் புயல், மழை தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக 1077, 04322-222207 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் அரசு அலுவலர்கள் வேண்டிய தகவல்களை தெரிவிப்பார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
 
இந்த நேரத்தை பயன்படுத்தி காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தால், இந்த தொலைபேசி உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தார், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்