தமிழக உள்ளாட்சித் தேர்தல்: 'திமுகவின் வெற்றிக்கு நரேந்திர மோதியே காரணம்'

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:22 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கணிசமான இடங்களை வெல்லவும், அதிமுக கிராமப்புற வாக்குகளை இழந்ததற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதிதான் காரணமாக இருக்கிறார் என மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் மற்றும் நகரப் பகுதிகளை மட்டுமே கொண்ட சென்னை தவிர்த்த 27 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பிரதமர் மோதியின் சமீபத்திய அறிவிப்பான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பை காட்டும்விதமாக, அதிமுகவுக்கு ஓட்டுப்போடாமல், வாக்காளர்கள் பல இடங்களில் திமுகவுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள் என்கிறார்.

''பாஜக கொண்டுவரும் எந்த திட்டத்திற்கும் அதிமுக எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதால்,மக்களிடம் அதிமுகவின் நன்மதிப்பு குறைத்துவிட்டது. திமுகவின் மாவட்ட செயலாளர்களும் பரவலாக வேலைசெய்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் முக்கிய காரணமாக நரேந்திர மோதி இருக்கிறார். ஆளுமை பொருந்திய ஆளும்கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள் என்பதைதான் இந்த முடிவுகள் காட்டுகின்றன,''என்கிறார்.

அதிமுக கட்சி தொடங்கியதில் இருந்து, கிராமப்புற வாக்குகளைப் பெருமளவு பெறும் கட்சியாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், ''அதிமுக கிராமங்களில் எளிதாக வெற்றி பெறும் என்றும் நகரப்பகுதிகளில் திமுக செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கும் என்ற கணிப்பை இந்த உள்ளாட்சித் தேர்தல் மாற்றிவிட்டது.1986ல் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோதும்,உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அந்த நேரத்தில், எம்ஜிஆரின் ஆளுமையைவிட, திமுகவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கிய தருணம் என்பதால் அந்த மாற்றம் ஏற்பட்டது. ஆனால் 2019ல் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக சந்தித்துள்ள இழப்பு என்பது வேறுவகையானது,''என்கிறார்.

''மத்திய அரசின் ஆட்சியை தமிழகத்தில் செயல்படுத்தும் நபர்களாக அதிமுகவினர் இருப்பதாக ஆழமாக மக்கள் மனதில் பதிவாகிவிட்டது என்பதால்தான் கணிசமான இடங்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுகவின் வாக்குகளை அமமுகவும் எடுத்துக்கொண்டுள்ளது என்பதும் கவனத்திற்குரியது,'' என்றார் அவர்.

மேலும் மூன்று ஆண்டுகள் தாமதமாக தேர்தல் நடத்தப்பட்டது, நிதி இல்லாமல் கிராமங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் போனது போன்றவை மக்களிடம் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்கிறார் அவர். ''கிராமங்களில் மக்கள் தங்களது குறைகளைக் கேட்பதற்கு, கிராம பஞ்சாயத்து தலைவர் தேவை என எண்ணினார்கள். தங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடம் குறைகளை சொல்வதற்கு பதிலாக அதிமுக அரசு நியமித்த அதிகாரிகளிடம் செல்வதில் பலரும் சிக்கல்களைச் சந்தித்தார்கள். அதிமுக, பாஜக மீதான தங்கள் எதிர்ப்பை பலமாக மக்கள் பதிவு செய்துள்ள தேர்தலாக இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைந்துவிட்டது,''என்கிறார்.

பாஜக, நாம் தமிழர் கட்சியினர் சில இடங்களில் வென்றுள்ளது எதனை காட்டுகிறது என்று கேட்டபோது, ''திமுக - அதிமுக கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி என்ற நிலையில் மாற்றமில்லை. ஆனால் பாஜக, நாம் தமிழர், அமமுக போன்ற கட்சிகளும் கிராமங்களில் தங்களது இடத்தை விஸ்தாரப்படுத்தி வருகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது,''என்றார் ராதாகிருஷ்ணன்.

கோவை, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் அதிமுக தொடர்ந்து வெற்றிகளை குவிக்க என்ன காரணம் என்று கேட்டபோது, ''அதிமுகவின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மேற்கு மாவட்டங்கள் தொடர்கிறன. மேற்கு மாவட்டங்களில் திமுகவினர் கூட அதிமுக அமைச்சர்களுடன் நல்ல உறவில்தான் இருப்பார்கள் என்ற கருத்தும் உள்ளது. தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் சாதி அடையாளம் ஒரு முக்கிய காரணம். இங்குள்ள கவுண்டர் சாதியினர், தங்கள் சாதியை சேர்ந்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போதும் இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது. ஆனால் மேற்கு மாவட்டங்களில் பல இடங்களில் திமுகவின் வேட்பாளர்களும் கணிசமான இடங்களை வெற்றிபெற்றுள்ளனர் என்பதையும் பார்க்கவேண்டும்,''என்கிறார் அவர்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதமுடியுமா என்று கேட்டபோது, ''கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்த்த பின்னர், நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்துமா என்பது கேள்விக்குறிதான். தொடர்ந்து மக்களிடம் அதிருப்தியைச் சந்தித்து வந்தால், 2021 தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தை பாதிக்கும் புதிய திட்டங்களை மோதி கொண்டுவந்தால், அதன் தாக்கம் அதிமுகவின் வாய்ப்புகளைப் பாதிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை,''என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்