சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

Siva

திங்கள், 11 நவம்பர் 2024 (16:52 IST)
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தனது சொந்த பணத்தில் லட்சக்கணக்கில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து விஜய் வசந்த் எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது
 
இந்த கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏழை எளிய மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு  சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன். நிதி இல்லாத காரணத்தால் எந்த மாணவரும் தங்கள் கல்வி பயணத்தை பாதியில் நிறுத்தி விட கூடாது என எனது தந்தை மறைந்த வசந்த குமார் அவர்கள் உறுதியுடன் இருந்தார். 
 
இதற்காக அவர் ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக ஏராளமான உதவிகள் செய்து வந்தார். அவரது மறைவிற்கு பின் அவர் வழியில் எல்லா வருடமும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன். இந்த வருடமும் 2024- 25 கல்வி ஆண்டில் கல்வி நிதி உதவி வழங்குவதற்கு தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 
 
அதன் அடிப்படையில் அவர்களின் தகுதியை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாக காசோலை வழங்கப்பட்டது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் இளைஞர்களின் கரங்களில் உள்ளது. அந்த இளைஞர்களுக்கு சிறந்த கல்வி செல்வதை அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை. எனது தரப்பில் இருந்து என்னால் இயன்ற வரையில் அதை தொடர்ந்து செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.
 
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்