போர் விமானம் வெடித்து பாகிஸ்தானில் விழுந்த இந்திய விமானப்படை அதிகாரி

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:49 IST)
1965 இந்திய-பாகிஸ்தான் போரின் இறுதி நாளன்று, கசூர் பகுதியில் பாகிஸ்தான் நிலைகளின் மீது விமான தாக்குதல் நடத்தும் பொறுப்பு விமானப்படையின் லெஃப்டினென்ட் நந்தா கரியப்பா, குக்கே சுரேஷ் மற்றும் ஏ.எஸ். செஹல் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மூன்று பேரும் முதல் சுற்று தாக்குதலை நடத்தியபோது, விமான எதிர்ப்பு பீரங்கியால் தாக்கப்பட்ட செஹல், தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியாமல் போனது. கரியப்பாவும், குக்கேயும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இலக்கின் மேலிருந்து தாக்குதல் நடத்திய கரியப்பாவின் ஹண்ட்டர் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது.





நந்தா கரியப்பாவின் விமானத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுந்ததை சுரேஷ் பார்த்துவிட்டார். விமானத்தின் மேலே எழும்பும் தீயை கட்டுப்படுத்த நந்தா கரியப்பா செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. விமானத்தில் இருந்து வெளியேறுமாறு இரண்டு முறை அறிவுறுத்தினார் சுரேஷ், ஆனால் அவற்றை நந்தா புறக்கணித்துவிட்டார்.

வெளியேறச் சொல்லி மூன்றாவது முறையாக சுரேஷ் கத்திய பிறகு, நந்தா கரியப்பா வெளியேறுவதற்கான பொத்தானை அழுத்தி அவர் பாராசூட் மூலம் வெளியேறிய அடுத்த கணம், அவருடைய ஹண்டர் விமானம் தீப்பிழம்பை கக்கிக்கொண்டு இந்திய எல்லைக்குள் விழுந்தது.




ஆனால், நந்தா கரியப்பா விழுந்த பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியாக 9 மணி 4 நிமிடத்தில் கரியப்பா தரையில் மோதியபோது அவரது கரத்தில் கட்டியிருந்த கைக்கடிகாரமும் அந்த நொடியே நின்றுபோனது.

முதுகெலும்பு பாதிப்பு

கரியப்பாவின் உடலின் பின்பகுதி தரையில் மோதியதால், அவரது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை சுற்றிவளைத்து, கரங்களை உயர்த்தச் சொன்னபோது, நந்தா கரியாப்பாவால் கைகளையே தூக்க முடியவில்லை. முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதால் அசையக்கூட முடியாமல் முடங்கிப்போனார்.




இதை நினைவுகூர்கிறார் நந்தா கரியப்பா, "ஏறக்குறைய மயக்க நிலையில் இருந்த நான் என்னைச் சூழ்ந்திருப்பது இந்திய வீரர்கள் என்றே நினைத்தேன். தொலைவில் குண்டு வெடிக்கும் சப்தமும் கேட்டது. உன்னைச் சேர்ந்தவர்கள் எங்களை தாக்குகிறார்கள் என்று அவர்கள் சொன்னபோதுதான் நான் எதிர்தரப்பிடம் சிக்கிவிட்டதை உணர்ந்தேன்'' என்கிறார்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழாவது கைதியாக பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட அவர்தான் அந்த கடைசி போர்க்கைதியும் ஆவார். விசாரணையின்போது, அவர்களின் கேள்விக்கு கிளிப்பிள்ளை போல தனது பெயர், பதவி, எண் போன்ற தகவல்களை சொல்லிவிட்டார். நந்தா கரியப்பா என்ற பெயரை கேட்ட ஒரு பாகிஸ்தானிய அதிகாரி, ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா உனக்கு உறவா என்று கேட்டிருக்கிறார்.


 



கரியப்பாவுக்கு செய்தி அனுப்பிய அயூப் கான்

நந்தா கரியப்பா, இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாவின் மகன். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பு கரியப்பாவின் கீழ் பணிபுரிந்த அயூப் கான், கரியப்பாவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். நந்தா கரியப்பா பிடிபட்ட அன்றே, அவர் தனது காவலில் பாதுகாப்பாக இருப்பதாக ரேடியோ பாகிஸ்தானில் அயூப் கான் அறிவித்தார்.


இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் ஹை கமிஷனர் மூலம் கரியப்பாவைத் தொடர்பு கொண்ட ஆயூப் கான், நந்தா பாதுகாப்பாக இருப்பதாக செய்தி அனுப்பினார். கரியப்பா விரும்பினால், அவரது மகனை விடுவிப்பதாகவும் தெரிவித்தார்,


அயூப் கானின் செய்தியை பணிவுடன் நிராகரித்தார் கரியப்பா. பாகிஸ்தான் ஹை கமிஷனரிடம் பதிலுரைத்த கரியப்பா, "நந்தா என்னுடைய மகன் மட்டுமல்ல, இந்த தாய்த் திருநாட்டின் புதல்வன். இந்தியத் தாயின் பிற போர்க்கைதிகளை போன்றவரே அவரும். அவரை வெளியே அனுப்ப விரும்பினால், போர்க்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துவிடுங்கள்" என்று சொன்னார்.

ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்

தான் உயிர் பிழைத்திருக்கும் செய்தி இந்தியாவிற்கு சொல்லப்பட்ட தகவல் நந்தாவுக்கு தெரியாது. அவர் தனது நினைவுகளை புரட்டிப்பார்க்கிறார், "நாட்டுக்கு திருப்பி அனுப்புகிறோம் என்று ஆசைகாட்டிய பாகிஸ்தானிய அதிகாரிகள், இந்திய ராணுவத்தை பற்றிய தகவல்களை என்னிடம் இருந்து தெரிந்துக் கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்தார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.எனவே, சிகிச்சைக்காக லுய்யானிக்கு அழைத்துச் சென்றார்கள். சித்ரவதை செய்யப்போவதாக அவர்கள் அச்சுறுத்தினாலும், அப்படி எதையும் செய்யவில்லை. பத்து நாட்கள் தனிமையில் வைத்திருந்தார்கள்" என்கிறார்.

இதனிடையே, நந்தா கரியப்பாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜென்ரல் மூஸா, உதவி எதாவது தேவையா என்று கேட்டார். இந்தியாவின் பிற போர்க்கைதிகளுடன் தன்னை வைக்கவேண்டும் என்று நந்தா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மூஸா, 57 போர்க்கைதிகள் இருந்த ராவல்பிண்டிக்கு அவரை மாற்றினார்.

ராவல்பிண்டியின் சி.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தாவை பார்க்க அயூப் கானின் மனைவியும், அவரது மூத்த மகன் அக்தர் அயூபும் வந்தார்கள். "ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்களைக் கொண்ட அட்டைப்பெட்டி மற்றும் வோட் ஹவுசின் (Wodehouse) ஒரு புத்தகத்தையும் எனக்கு கொடுத்த அவர்கள், எனது உடல்நிலையை விசாரித்துவிட்டு, விரைவில் விடுவிப்பதாக ஆறுதலளித்தார்கள்" என்று ஏர் மார்ஷல் நந்தா கரியப்பா கூறுகிறார்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் ஜே.சி.ஓ, நந்தா கரியப்பாவிடம் வந்து சொன்னார், "நாளை இரவு விருந்துக்கு அதிபர் அயூப் உங்களை அழைத்திருக்கிறார்" விருந்து அழைப்பை புன்னகையுடன் மறுத்துவிட்டார் நந்தா கரியப்பா.

ஆஷா பாரேக்கின் பரிசு

இதனிடையே, இந்திய போர்க்கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து பல உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன. நடிகை ஆஷா பரேக்கிடமிருந்து வந்த, பல்வேறு வகை உலர் பழங்கள் கொண்ட ஒரு பொட்டலம் கரியப்பாவுக்கு கிடைத்தது. 1966 புத்தாண்டு தினத்தன்று சிறை அதிகாரி அவருக்கு சுவையான கோழிக்கறி உணவை கொடுத்தார்.


ஆடைகளுக்கு அளவெடுக்க தையற்காரர் வரவிருப்பதாக சிறையில் பணிபுரிந்த இந்து மத துப்புரவு பணியாளர் நந்தா கரியப்பாவிடம் ரகசியத் தகவலை சொன்னார். நந்தா கரியப்பாவுக்கான ஆடைகள் தைக்கப்பட்டன. அவரை இந்தியா திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் அவை. திடீரென்று ஒரு நாள் நந்தா கரியப்பாவின் கண்கள் கட்டப்பட்டு பெஷாவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஃபோகர் எஃப் 27 விமானம் மூலம், பாகிஸ்தானில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டார் நந்தா.

சரியாக 9 மணி 4 நிமிடத்தில் அவர்கள் இந்திய எல்லையை தாண்டினார்கள். அதாவது நான்கு மாதங்களுக்கு முன்பு இதே நேரத்தில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானில் விழுந்தார் நந்தா கரியப்பா. முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தினால், நந்தா கரியப்பா அதன்பிறகு போர் விமானங்களில் பணிபுரிய முடியவில்லை. ஆனால் ஹெலிகாப்டர்களை இயக்குவார். 1971ஆம் ஆண்டு போரில், ஹாஸிமாராவில் ஹெலிகாப்டர் பிரிவின் 111வது பிரிவுக்கு தலைமை தாங்கி வழிநடத்திய நந்தா கரியப்பா, இந்திய ராணுவத்தின் ஏர் மார்ஷலாக பதவி உயர்வுபெற்று ஓய்வு பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்