பிறந்த குழந்தைக்கு புகட்ட பால் சுரக்காததால் தாய் தற்கொல

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (23:45 IST)

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு புகட்ட பால் சுரக்காததால் தாய் தற்கொலை செய்து கொண்டதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தைக்கு புகட்ட அவருக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றும் இதனால், மனம் உடைந்த விஜயலட்சுமி கடந்த 1-ம் தேதி தனது கணவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி நேற்று முன்தினம் (ஜூலை 07) உயிரிழந்தார். இது குறித்த தகவலின்பேரில் குன்னம் போலீசார் நேரில் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஜயலட்சுமிக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, கோட்டாட்சியர் நிறைமதி விசாரணை நடத்தி வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
தாய்ப்பால் பரிசுத்தமானதா? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்கு தரலாமா?
ம்
 
 
கேரளாவின் பிரபல வணிக வளாகத்தில் நள்ளிரவு ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகமாக கூடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
கேரள மாநிலத்தில் பிரபலமாக மால்களில் ஒன்றாக உள்ளது லூலூ மால். திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இரண்டு இடங்களில் செயல்பட்டு வரும் இந்த மால், தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. ஜூலை 6 அன்று இரவு 11:59 மணி முதல் ஜூலை 7 விடியும் வரை லூலூ நிறுவனத்தின் இந்த இரண்டு வணிக வளாகத்திலும் அனைத்துப் பொருட்களுக்கும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
 
அறிவிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இந்த இரண்டு வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 50 சதவீத தள்ளுபடி அறிவிப்பால் இரவை பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் பொருட்களை வாங்குவதற்கு லூலூ மாலை முற்றுகையிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
 
ஒருகட்டத்தில் மால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. எஸ்கலேட்டர், கடைகள் உட்பட எங்கு பார்த்தாலும் மக்கள் நகர முடியாமல் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
 
"நள்ளிரவு ஷாப்பிங் மூலம், மக்கள் அமைதியான சூழ்நிலையில் ஷாப்பிங் செய்ய முடியும். சோதனை அடிப்படையில் நாங்கள் இதை ஒரு நாளுக்கு அறிமுகப்படுத்தினோம். இதில் சில தடைகளை சந்தித்தோம். இருப்பினும், அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதை எவ்வாறு அனைத்து நாட்களும் நடைமுறைப்படுத்துவது என்பதற்கேற்ப திட்டமிடுவோம்" என்று லூலூ மால் நிர்வாகம் தெரிவித்துள்ளது என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
'அமைதியான முறையில் போராடுங்கள்'
 
இலங்கை நெருக்கடி
 
போராட்டத்திற்கு நேற்றிரவு முதலே வரத்தொடங்கிய பல்கலைக்கழக மாணவர்கள்
 
இலங்கையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தரப்பினர் கொழும்பை இன்று முற்றுகையிடவுள்ள நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அதில், "போராட்டத்தில் ஈடுபடப்போகின்றீர்கள் என்றால் அதனை அமைதியான முறையில் முன்னெடுங்கள். அதேபோல் அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க ராணுவம் மற்றும் போலீசார் நினைவில் கொள்ளவேண்டும். குழப்பமும் அழுத்தமும் பொருளாதாரத்தை சரி செய்யவோ அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது. வன்முறை தீர்வல்ல" என அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டால் நிலைமை தீவிரமடையும் - திஸ்ஸ விதாரண
 
 
 
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது என, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இது குறித்து, அவர் கூறுகையில், "மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டால் தற்போதைய நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
 
தவறான தீர்மானங்கள் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
 
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது.
 
ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தேவைக்காகவே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.
 
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் அல்லதொரு அபிப்ராயம் கிடையாது" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்