விழுப்புரத்தில் திமுக கொடி நடும்போது மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவத்தில் ஒருவர் கைது - நடந்தது என்ன?

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:32 IST)
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக சாலையில் திமுக கட்சி கொடி நடும்போது, சிறுவன் பிடித்த இரும்பு கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தார். இதில் சிறுவனை அழைத்து சென்ற ஒப்பந்ததாரரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம், லட்சுமி தம்பதியரின் மூன்றாவது மகன் தினேஷ் (வயது 13) 8ஆம் வகுப்பு படித்து வந்தார். தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், சிறுவனின் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

தினந்தோறும் வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் சூழ்நிலையில் தான் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் வாழ்க்கை உள்ளது. சம்பவம் நடைபெற்ற கடந்த 20ஆம் தேதி அன்று அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற ஒப்பந்ததாரர் சிறுவனை அவருடன் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் நன்னாடு கிராமத்தை சேர்ந்த பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா கடந்த 20ஆம் தேதி மாலை மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த திருமண விழாவிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் வரவேற்பிற்காக திருமண மண்டபத்திற்குச் செல்லும் சாலையில் திமுக கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பம் நடும் பணி நடைபெற்றது.

அப்போது கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் தினேஷ் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் சிறுவனை மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுவன் தினேஷ் தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சிறுவன் தினேஷ் கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தனர். மேலும் மாற்றுக் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர், சிறுவன் தினேஷ் மரணத்திற்கு காரணமான நபர்களை கைது செய்யும்படி கருத்து தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுவன் உயிரிழப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், " பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். சிறுவன் தினேஷை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் துணை நிற்கிறேன்," என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை காவல் துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் கேள்விகள் எழுப்பினர்.

சிறுவன் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சிறுவனை வேலைக்கு அழைத்துச் சென்ற வெங்கடேசன் என்பவரை விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது IPC 304 (2) என்ற ஒரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 304 (2) என்ற பிரிவானது, தன் செயலால் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்று தெரிந்தே ஒரு குற்றச்செயலில் ஈடுபடுவதாகும்.

இதே போன்று சம்பவம் கடந்த அதிமுக ஆட்சியின் போது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதைப்போல 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவை மாவட்டத்தில் அதிமுக கட்சி கொடி நடும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரம் மற்றும் சாலைகளில் கொடி கம்பம் நடுவது தொடர்பான விவாதத்தை தீவிரமாக்கியது.

இந்த விவகாரத்தில் அதிமுக மீது திமுக குற்றம்சாட்டியது. தற்போது திமுக ஆட்சியில் அவர்கள் கட்சி சம்மந்தப்பட்ட நிகழ்வால் மீண்டும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினர் செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. அதிமுக, திமுக இரு கட்சிகளுமே வித்தியாசம் இல்லாமல் செயல்படுவதாக சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் கூறுகையில், "கழக ஆட்சிகளில் கொடி கட்டிப் பறக்கிறது பேனர் கலாச்சாரம். தலைமையில் இருப்போர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது வாடிக்கையாக உள்ளது. உயிர்ப் பலிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது அந்தப் பட்டியலில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுவன் தினேஷ் உயிரிழந்துள்ளார். இச்சிறுவன் பலியானது சமூகச் சோகமாகும்," என்றார்.

"கற்றறிந்த தமிழ்ச் சமூகம் இதற்குத் தலைகுனிய வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பொதுவெளிகளில் கொடி நடுதல், பேனர் கட்டுதல் வேண்டாம் எனும் அன்பு வேண்டுகோள் மட்டும் போதாது. மீறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டனை கடுமையாக்க வேண்டும். தினேஷ் உயிரிழப்பு விவகாரத்தை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற உயிர்ப் பலிகளுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்