நரேந்திர மோதியின் செல்வாக்கு கொரோனா, பொருளாதார மந்தநிலையால் சரிந்துவிட்டதா? கணிப்புகள் கூறுவது என்ன?

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (12:55 IST)
இந்திய வாக்காளர்கள் மத்தியில் மிக நீண்ட தேனிலவைக் கொண்டாடியவர் பிரதமர் நரேந்திர மோதி.

பெரும் நிதி, வலுவாக இயங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு மோதி இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவரால் ஒரு தீவிரமான இந்து தேசியவாத தளத்தை உருவாக்க முடிந்தது. வாக்காளர்களை கவர்ந்திழுக்கவும் எதிரிகளை வீழ்த்தவும் தனது வசீகரத்தைப் பயன்படுததிக் கொண்டார்.

அதிர்ஷ்டமும் அவர் பக்கம் இருந்தது. 2016-ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரும் தவறாக அமைந்தது. ஆனாலும் அவரை ஆதரிப்பவர்கள் அதை மன்னித்து விட்டார்கள். மந்தமான பொருளாதாரமும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான வீழ்ச்சியும் மோதியின் செல்வாக்கைச் சரித்துவிட்டதாகத் தெரியவில்லை. வலுவான எதிர்க்கட்சி இல்லாததும் அவருக்குச் சாதகமாக இருக்கிறது.

ஆயினும், நரேந்திர மோதியின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புகழ் குறையத் தொடங்குகிறதா?

இந்தியா டுடே பத்திரிகையின் அண்மையில் 14 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் பதிலளித்தவர்களில் 24% பேர் மட்டுமே இந்தியாவின் அடுத்த பிரதமராக "மிகவும் பொருத்தமானவர்" நரேந்திர மோதி என்று கருதுகின்றனர். அடுத்த பொதுத் தேர்தல் 2024 இல் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இதேபோன்ற கருத்துக் கணிப்பில் இருந்து இது 42 சதவிகிதம் இருந்திருக்கிறது. இப்போது அவரது செல்வாக்கு செங்குத்தாகச் சரிந்திருக்கிறது.

"எனது 20 ஆண்டுகளுக்கும் மேலான கருத்துக் கணிப்பு அனுபவத்தில் எந்தப் பிரதமரின் புகழிலும் இதுபோன்ற வீழ்ச்சி நிகழ்ந்ததை என்னால் நினைவுகூர முடியவில்லை" என்று அரசியல்வாதியும், மோதியின் விமர்சகருமான யோகேந்திர யாதவ் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதிக்கு இது ஒரு கடினமான ஆண்டு. இரண்டாவது கொரோனா அலையை அவரது அரசு தவறாகக் கையாண்ட நேரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். பொருளாதாரம் தள்ளாடி வருகிறது: பணவீக்கம் அதிகரித்து விட்டது. பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. நுகர்வு விகிதமும் சரிந்திருக்கிறது.

சில துயரங்களும் அவநம்பிக்கையும் இந்தியா டுடே இதழின் கருத்துக் கணிப்பில் பிரதிபலிக்கின்றன. இதில் பங்கேற்றவர்களில் சுமார் 70% பேர் தொற்றுநோய்களின் போது தங்கள் வருமானம் குறைந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதே அளவினர் கொரோனா காலத்தில் உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமான 4,30,000 ஐ விட அதிகமாக இருப்பதாக நம்புகின்றனர்.

ஆனால் மோதி அரசு கொரோனாவை கையாண்ட விதம் "நன்றாக" இருந்தது என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 36% பேர் பதிலளித்துள்ளனர். மக்களுக்கு ஏற்பட்ட துயரத்துக்கு மோதியின் அரசு மட்டுமே காரணம் என்று கூறியிருப்பவர்கள் 13% பேர் மட்டுமே. 44% பேர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொரோனா நடவடிக்கைகள் குழப்பமாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.

தொற்றுநோய் பெருமளவில் பாதிக்கவில்லை என்றால் மோதியின் செல்வாக்கு ஏன் குறைந்திருக்கிறது என்பதற்கான குறிப்புகளையும் இந்தக் கருத்துக் கணிப்பு தருகிறது. பணவீக்கமும் வேலைவாய்ப்பு இல்லாததும் இரண்டு கவலைக்குரிய அம்சங்களாக உருவெடுத்திருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்பில் பதலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியது மோதி அரசின் மிகப்பெரிய தோல்வி என்று கூறியுள்ளனர்.

"மோதியின் புகழ் வீழ்ச்சியடைவதில் ஆச்சரியமில்லை" என்று டெல்லியைச் சேர்ந்த கொள்கைசார் ஆராய்ச்சி மையத்தின் ராகுல் வர்மா கூறுகிறார்.

நரேந்திர மோதி மக்களைப் பிளவுபடுத்தும் தலைவராக இருக்கிறார். அவரது ஆட்சியில் ​​ஊடக சுதந்திரம் கணிசமாகக் குறைந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் 2014-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவிக்கு வந்த பிறகு இதுவரை செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. அவருக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. நரேந்திர மோதியும் அவரது கட்சியும் மதப் பதற்றத்தை தூண்டும் வகையிலான அரசியலைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன. இவை வெல்ல முடியாதவர் என்ற நரேந்திர மோதியின் பிம்பத்தை உடைத்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் அவரது கட்சி தோல்வியடைந்தது. இது அவரது எதிரிகளுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

விளம்பர பலகைகள், தடுப்பூசி சான்றிதழ்கள், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் என காணும் இடங்களில் எல்லாம் முகம் காட்டும் ஒரு தலைவருக்கு கருத்துக் கணிப்புகளில் செங்குத்தான சரிவு தனிநபர் வழிபாட்டு வீழ்ச்சியின் தொடக்கமே என பலரும் நம்புகிறார்கள்.

ஆனால் இதுபோன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்கும் கருத்துக் கணிப்புகள் உண்மையான வாக்காளர்களைக் கொண்ட தேசத்தின் மனநிலையைப் பிரிதிபலிக்கின்றனவா?

13 நாடுகளின் தலைவர்களின் தேசிய மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் "மார்னிங் கன்சல்ட்"டின் புள்ளி விவரங்களின்படி, நரேந்திர மோதிக்கான ஆதரவு கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து 25 புள்ளிகள் சரிந்திருக்கிறது. ஆயினும், ஆகஸ்ட் மாத மத்தியில் 47% ஆதரவைப் பெற்று அவர் மற்றவர்களை விட முன்னணியில் இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் மற்றொரு கருத்துக் கணிப்பு அமைப்பான பிரஷ்ணத்தின் கணக்கெடுப்பில், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக 33% சதவிகிதம் பேர் மோதிக்கு ஆதரவளித்துள்ளனர்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட சி-வோட்டர் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10,000 பேரிடம் கருத்துக் கணிப்புகளை நடத்துகிறது. இந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்புகளின்படி கடந் மே மாதத்தில் மோதியின் செல்வாக்கு 37% ஆகக் இருந்திருக்கிறது. இது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து 20 புள்ளிகள் குறைவு. அது அவரது கட்சி மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வியடைந்த நேரம். அப்போதுதான் நாடு முழுவதும் இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு மோதியின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்து இப்போது 44%ஆக உள்ளதாக சி-வோட்டரின் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகிறார்.

"அவருக்கு மோசமான காலம் முடிந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். விசுவாசமான வாக்காளர் கட்டமைப்பின் காரணமாக அவரது மதிப்பீடுகள் 37% க்குக் கீழே இதுவரை குறையவில்லை."

குறிப்பிட்ட இடைவெளியைக் கொண்ட தொடர்ச்சியான கருத்துக் கணிப்புகள் தலைவர்களின் செல்வாக்கையும் மக்களின் மனநிலையையும் துல்லியமாகப் படம்பிடிப்பதற்கு உதவுவதாக தேஷ்முக் நம்புகிறார். சி-வோட்டரின் கணிப்பின்படி இந்தியாவின் டாப் 10 முதலமைச்சர்களில் 9 பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சாராதவர்கள் என்பது இன்னும் சுவாரஸ்யமான அம்சம்.

மோதி தனிப்பட்ட முறையின் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். "பலர் இன்னும் அவரை நம்புகிறார்கள். அவரது நோக்கம் நல்லது என்று நினைக்கிறார்கள்" என்கிறார் தேஷ்முக்.

கருத்துக் கணிப்புகளில் ஏற்பட்டிருக்கும் சரிவு மோதியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்குப் போதுமானதாக இருக்காது. மிகவும் குறைந்த நிலையில்கூட ராகுல்காந்தியை விட இரண்டு மடங்கு செல்வாக்கு மோதிக்கு இருந்திருக்கிறது. ஆகவே நம்பகமான எதிர்க்கட்சிகள் இல்லாததால் மோதிக்கு கூடுதலான ஆதரவு கிடைக்கலாம்.

"மோதிதான் இன்னும் பந்தயத்தில் முந்திச் செல்கிறார். ஆனால் கருத்துக் கணிப்புகளில் ஏற்பட்டிருக்கும் சரிவு அவரை கொஞ்சம் கவலைப்பட வைக்கும்" என்கிறார் வர்மா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்