ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர் குடும்பத்தினர்.
அரபிக்கடலில் புயல்சின்னம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பல விசைப்படகு மீனவர்கள் கேரளா, குஜராத், கோவா, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் கரைசேர்ந்துவிட்டனர்.
கரைதிரும்பாத 120 மீன்வர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியாத நிலையில், அவர்களை தேடுவதற்காக 'ஏரியல் சர்வே' எனப்படும் வான்வழித் தேடல் செய்து கண்டறியவேண்டும் என தூத்தூர் பகுதி பங்குதந்தைகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளரான பங்குதந்தை சர்ச்சில் மீனவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான பகுதியை ஈட்டி தருகிறார்கள் என்றாலும், அவர்களின் நலனில் மத்திய மாநில அரசாங்கங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுகிறார்.
''கியார் புயலுக்கு முன்பே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் இதுவரை கரை சேராதது மீனவர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கியார் புயலின் தாக்கத்தில் மீனவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியப்படாத வகையில், தற்போது ஏற்படக்கூடிய புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் மீனவர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து வான்வழி அறிவிப்பை ஆழ்கடலில் உள்ள இந்த ஆறு விசைப்படகு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் மீனவர்கள் கரை சேர்வதற்கு இயலாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக இருந்தால் அவர்களை உடனடியாக மீட்டு கரை சேர்க்க வேண்டும், ''என இந்திய மீன்வள துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சர், இந்திய கடலோர காவல்படை மேற்கு மண்டல அதிகாரி அவர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக சர்ச்சில் கூறினார்.
''கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 25 மீனவர்கள் கடலில் காணாமல் போகிறார்கள். ஒரு சிலர் கடலில் விபத்து ஏற்பட்டு இறந்துபோகிறார்கள். ஒருசிலர் இயற்கை சீற்றம் அல்லது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடுகிறார்கள். இவர்களை மீட்பதற்கு முக்கியதேவை நவீன தொலைத்தொடர்பு மையம். இதனை கன்னியாகுமரியில் அமைத்தால், மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என்கிறார் சர்ச்சில்.
இதனிடையே, தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது என்பதால், புயல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவித்துள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காணாமல் போன மீனவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மீட்கும் பணி நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன் இதுவரை இரண்டு படகுகளில் உள்ள மீனவர்களோடு பேசி அவர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். ''தகவல் அளிக்கப்பட்ட மூன்று படகுகளில் உள்ள மீன்வர்களை தேடி, தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருகிறோம். காணாமல் போனவர்கள் எத்தனை நபர்கள் என்பது தெளிவாக தெரியாத நிலையில் இருக்கிறோம். தகவல் தரும் நபர்களை தேட மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள்,'' என்றார்.
மீனவளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது ஆழ்கடல் மீனவர்களுக்கு அரசு அளித்துள்ள சாட்டிலைட் ஃபோனை பயன்படுத்தி இரண்டு படகுகளிலிருந்த மீனவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது என தெரிவித்தார். மீனவர்கள் காணாமல்போனால் அவர்களை தொடர்புகொள்ள நவீனவசதிகள் கொண்ட மையத்தை கன்னியாகுமரியில் அமைக்கவேண்டும் என கோருவது குறித்து கேட்டபோது, ''கன்னியாகுமரியில் மையம் அமைக்கவேண்டும் என்பதை ஆலோசித்துவருகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் அதிகம் உள்ளதால், அங்கு மையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனை விரைவில் பரிசீலிப்போம்,'' என்றார்.