டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

Siva

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (13:53 IST)
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில், அதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழக அரசு அவமதித்ததாக கூறி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மார்ச் மாதம், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, மதுபான கொள்முதல் அனுமதி வழங்குவதில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த நிலையில், அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரிப்பதிலிருந்து திடீரென விலகிக் கொண்டார். அதன் பின்னர், வேறு நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அவகாசம் கேட்டுக்கொண்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் தடுக்கப்படுகிறது; இது உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துகிறது" என அரசு வழக்கறிஞரிடம் கண்டனம் தெரிவித்தனர்.
 
"உச்ச நீதிமன்றம் செல்வதாக ஏற்கனவே தமிழக அரசு கூறியிருந்தால், இந்த வழக்கை இன்று விசாரிக்க பட்டியலிட்டிருக்க மாட்டோம்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
"இந்த மனு பொதுமக்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும்" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், "மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவே வழக்கு தொடரப்பட்டது" என தெரிவித்தார்.
 
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டாலும், எடுக்காவிட்டாலும், இந்த வழக்கை தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்