ராதாபுரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:31 IST)
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் எம். அப்பாவுவும் அ.தி.மு.க., சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஐ.எஸ். இன்பதுரை 69590 வாக்குகளையும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம். அப்பாவு 69,541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளரான எம். அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 'வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால் அவை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன. ஆனால், தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும்' என அப்பாவு தனது மனுவில் கோரியிருந்தார்.
மேலும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வாக்குகளை எண்ணும்போது கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதாவது 19, 20, 21 ஆகிய சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது தன்னை வெளியில் அனுப்பிவிட்டு, இன்பதுரை வெற்றிபெற்றதாகவும் அப்பாவு கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்ததுது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை தாக்கல்செய்ய உத்தரவிட்டதோடு, அவற்றை மீண்டும் எண்ணவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடைசி மூன்று சுற்றுக்கான வாக்குப் பதிவு எந்திரங்களையும் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.