ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஜோதிமணி எம்.பி.!!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:39 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் அந்த தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி ஈடுபட்டார்.
 
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பணியை ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகக் கூறி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
 
இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் அவர் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தமது பணி பாதிக்கப்படுவதாக ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
 
அவர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சிலநிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் சங்கர்பாபு அவரை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டு சமரசத்தில் ஈடுபட முயன்றார். ஆனாலும், தொடர்ந்து அங்கேயே அமர்ந்து ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்