வாட்சப்பில் பேசியவர் தன்னுடைய தலைமை செயல் அதிகாரி என நம்பிய திவ்யா ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள ஐந்து அமேசான் பரிசு கூப்பன்களை வாங்கி அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் தான் வாட்சப்பில் பேசிய நபர் அவருடைய தலைமை அதிகாரி இல்லை என்பது திவ்யாவுக்கு தெரியவந்துள்ளது. தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்தை வாட்சப்பில் வைத்து அவரைப் போலவே திவ்யாவிடம் பேசி ஏமாற்றியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, சைபர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மோசடி செய்யப்பட்ட பணத்தை பயன்படுத்த முடியாதவாறு சைபர் குற்றப் பிரிவு போலீசார் முடக்கினர். கோவையில் நிகழ்ந்துள்ள பல விதமான சைபர் மோசடிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
"போதிய விழிப்புணர்வு இல்லை"
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கோவை சைபர் குற்றப் பிரிவில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் மக்கள் ஏமாந்ததாக கூறப்படும் பணம் ரூ.1.23 கோடி.
கோவை சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர் தண்டபானி பிபிசி தமிழிடம் பேசுகையில், "மக்களிடம் சைபர் குற்றங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போது சைபர் மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்க 1930 என்கிற எண் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்படுகின்றன.
பணம் சம்மந்தப்பட்ட சைபர் குற்றங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவர்களுக்கு தெரியாமல் நிகழ்வதில்லை. ஆதார் எண், பேன் எண், வங்கி தகவல்கள், ஓடிபி வரைக்கும் பலரும் கொடுத்துவிடுகின்றனர். வெகு சில குற்றங்களில் தான் பாதிக்கப்படுவருக்கு தெரியாமலே அவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. ஆனால், இத்தகைய பெரிய அளவில் தொழில்நுட்பங்களுடன் ஹேக் செய்து நிகழ்த்தப்படும் குற்றங்கள் சொற்ப அளவுதான்.
கிரெடிட் கார்ட் பெறுபவர்கள் அல்லது அதற்காக விண்ணப்பம் செய்பவர்களின் தகவல்கள் இவர்களுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது. அதன் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்ட் தருவதாக பேசுவார்கள். அவ்வாறு இல்லையென்றால் தொழில் அல்லது நிதி திட்டங்களில் முதலீடு செய்ய கூறுவார்கள்.
இது போன்ற அழைப்புகளை பெரும்பாலானவர்கள் தவிர்த்துவிட்டாலும் ஒரு சிலருக்கு இதில் ஆசை இருப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு சிலரைதான் குறிவைத்து சைபர் குற்றவாளிகள் செயல்படுகின்றனர். பண மோசடி குற்றங்கள் எதுவும் முதல்முறை அறிமுகத்திலே நிகழ்ந்ததாக இருப்பதில்லை. மக்களிடம் தொடர்ந்து பேசி ஆசை காட்டி தான் சைபர் மோசடிகள் நிகழ்த்தப்படுகின்றன.
எஸ்.எம்.எஸ் மூலம் நடைபெறும் முறைகேடுகள் தனித்து ஒரு சிலரை குறிவைத்து நடத்தபப்டுவதில்லை. மொத்தமாக ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்பப்படுகின்றன. அதில் ஒரு சிலர் பிழையான இணைப்புக்குள் சென்றால் அதன் மூலம் அவர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன. இவற்றை தடமறிவதும் கடினமான ஒன்று.
ஆன்லைன் கடன் செயலி
ஆன்லைன் கடன் செயலி மூலம் நிகழும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் கடன் பெறுவது எளிதில்லை. இதனால் உடனடியாக எளிதில் கடன் வழங்குவதாகக் கூறி தான் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் இயங்குகின்றன. இவை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது கிடையாது. இவற்றை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதும் கடினமான விஷயம். ஒரு செயலியை முடக்கினால் உடனடியாக வேறொரு செயலியை உருவாக்கிவிடுவார்கள். பொதுமக்கள் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும். சைபர் குற்றம் நிகழ்ந்தால் தாமதிக்காமல் புகார் அளித்தால் தான் துரிதமாக பணத்தை மீட்க முடியும்" என்றார்.
இணைய மோசடி என்பது தொழில்நுட்பங்களால் இல்லை தந்திரங்களால் நிகழ்கின்றன என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன். பிபிசி தமிழிடம் பேசியவர், "சைபர் குற்றம் என்றால் மக்களுக்கு தெரியாமலே பணத்தை எடுத்துவிடுவார்கள் என்று பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால் 95% சைபர் குற்றங்கள் மக்களின் ஈடுபாடு இல்லாமல் நிகழ்வதில்லை.
வங்கிகள் மற்றும் இதர கடன் சேவைகளைத் தவிர வேறு யாரும் கடன் வழங்க சட்டப்படி அனுமதியில்லை. மேலும் வங்கிகளின் கடன் பெறுவதற்கான நடைமுறையும் அதிகம். ஆனால் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் உடனடி பணம் என்றுதான் விளம்பரம் செய்கின்றன. செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே பதிவு செய்பவரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை இந்த செயலிகள் எடுத்துக் கொள்கின்றன.
அதன் பின்னர் வட்டியை திருப்பி செலுத்த சொல்லி மிரட்டுவார்கள் இல்லையென்றால் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள். கூகுள் பிளே ஸ்டோர் இது போன்ற கடன் செயலிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில்லை. ஒரு செயலியை தடை செய்வதோடு இதற்கு தீர்வு கிடைத்துவிடாது. அரசாங்கம் தான் அதற்கு தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும்.
சைபர் மோசடிகள் ஒரு எல்லைக்கு உட்பட்டு நடப்பதில்லை. தமிழ்நாட்டில் நிகழும் சைபர் குற்றங்கள் வேறு மாநிலங்களிலிருந்தும் கூட நிகழ்த்தப்படுகின்றன. எனவே இந்திய அளவில் சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து மாநில காவல்துறையையும் ஒருங்கிணைத்து செயல்படும் வழிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது` என்றார்.
சைபர் குற்றங்கள் தொடர்பாக cybercrime.gov.in என்கிற இந்திய அரசின் இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். 1930 என்கிற கட்டணமில்லா எண்ணிலும் அழைத்து புகார் அளிக்கலாம்.