'கேஜிஎஃப் 2' படத்தை அடுத்து 'கேஜிஎஃப் 3' வருமா?

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:24 IST)
கடந்த 2018ம் ஆண்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 'கே.ஜி.எஃப்- சாப்டர்-1' படம் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது.

ராக்கி பாய் கதாப்பாத்திரத்தில் நடிகர் யஷ் இரண்டு வருடங்களுக்கு பின்பு அதன் இரண்டாம் பாகத்தோடு வருகிறார்.

இந்த இரண்டாம் பாகத்தில் யஷ்ஷூடன் பிரகாஷ் ராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் நீட்சியாகவே இரண்டாம் பாகத்தின் கதையும் அமைந்திருக்கிறது.

இந்த திரைப்படம் இந்த மாதம் 14ம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் 'கே.ஜி.எஃப்- சாப்டர்-2' படக்குழு புரோமோஷனுக்காக மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை சென்னையில் 'கே.ஜி.எஃப்-2' படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

படத்தின் கதாநாயகன் யஷ், கதாநாயகி கீர்த்தி ஷெட்டி, இயக்குநர் பிரசாந்த் நீல், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் நடிகை ஈஸ்வரி ராவ் பேசும்போது, "இந்த படத்தின் மூலம் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்த படம் குறித்து என்னை விட என் பிள்ளைகளிடம்தான் கேட்க வேண்டும். அந்த அளவிற்கு 'கே.ஜி.எஃப்' படத்தின் ரசிகர்கள் அவர்கள். இந்த பிரம்மாண்ட படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.

படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி உள்ள ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்ஸின் எஸ்.ஆர். பிரபு பேசுகையில், 'இந்த படத்தில் ஒவ்வொரு துறையிலும் பார்த்து பார்த்து வேலை பார்த்துள்ளதால் தான் இதன் மீது எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளது. புனித் ராஜ்குமார் தான் இந்த படத்தை எங்களுக்கு கொண்டு வர காரணமாக இருந்தார். பிரம்மாண்டமாக ஒரு படம் உருவாகிறது எனும் போது அதில் நிறைய பரிசோதித்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது,' என்றார்.

நிகழ்ச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் உரையாடலில்

கே.ஜி.எஃப்' படம் கன்னட சினிமாவின் முகத்தை மாற்றியதில் முக்கியமானது. அந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் யஷ், "நம் மொழியில் எடுக்கும் படத்தை மற்ற மொழிகளிலும் எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படம் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கதையும், பொழுது போக்கும் தேவை. அதுக்கு என்னென்ன வேண்டுமோ அதை தயாரிப்பாளரும் இயக்குநரும் சேர்ந்து செய்தோம். நீங்கள் செய்வதில் தெளிவாக இருந்தால் விமர்சனங்களுக்கு பயபட தேவையில்லை". என்றார்.

அடுத்ததாக கே.ஜி.எஃப் - 2 படத்திற்கு பிறகு 'கே.ஜி.எஃப் - 3' வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த நீல் பிரசாந்த், "சாப்டர் 2 பார்த்து விட்டு இந்த கேள்வியை கேளுங்கள். எங்கள் முழு கவனமும் இப்போது இரண்டாம் பாகம் மீது தான் உள்ளது. அந்த அளவிற்கு உழைப்பை கொடுத்துள்ளோம்" என்றார்.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. கேஜிஎஃப் 2 ஏப்ரம் 14ஆம் தேதி வெளியாகிறது. எனவே கேஜிஎஃபிற்கு போதுமான தியேட்டர்கள் கிடைத்ததா? என்ற கேள்வியை எழுப்பியபோது, "எட்டு மாதத்திற்கு முன்பே இதை திட்டமிட்டு விட்டோம். அப்போது எங்களுக்கு எந்த படம் வெளியாகும் என தெரியாது. மக்களுக்கு படத்தின் மீது ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் இருந்தால் படம் அதற்கான தியேட்டரை எடுத்து கொள்ளும்" என்று பதிலளித்தார் நடிகர் யஷ்.

மேலும் 'முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அரசியல் அதிகம் உள்ளது போல தெரிகிறது. யஷ்ஷிற்கு அரசியல் ஆர்வம் உண்டா?' என்ற கேள்விக்கு பதிலளித்த யஷ்,"ஒரிஜினல் கே.ஜி.எஃப் இல்லை. இது ஃபிக்‌ஷனல் கதை என்று முன்பே சொல்லி விட்டோம். ராக்கிக்கு அரசியல் ஆர்வம் உண்டு. ஆனால், யஷ்ஷிற்கு அது இல்லை" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்