காமன்வெல்த் 2018: ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தும் இந்திய பெண்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (13:52 IST)
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் கிராமத்தில் நான் நுழைந்தபோது ஓர் இந்திய பெண் டிராக் சூட்டுடன் கையில் ஆஸ்திரேலிய கொடியை வைத்திருந்ததை பார்த்தேன். அவரிடம் பேசியபோது, அந்த பெண்ணின் பெயர் ருபிந்தர் கவுர் சந்து என்பதும் காமன்வெல்த்தில் 48கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக அவர் கலந்து கொள்கிறார் என்பதும் தெரியவந்தது.


 
 
கடந்த வருடம் அந்த பெண் ஆஸ்திரேலியாவில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு ஆஸ்திரேலியாவுக்காக வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
 
கிளாஸ்கோ காமன்வெல்த்தில் விதி அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. ருபிந்தர் கலந்துகொள்ள விரும்பியது 48 கிலோ எடைப்பிரிவில். ஆனால் அவர் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 200 கிராம் கூடுதலான எடையை கொண்டிருந்தார். இதனால் அவர் 53 கிலோ எடைப்பிரிவில் உள்ள வலுவான மல்யுத்த வீரர்களுடன் போட்டிபோட வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கே அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை.
 
ருபிந்தர் கவுர் சந்துவுக்கு இப்போது 33 வயதாகிறது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டார். சாஹிபா என்ற பெயர் கொண்ட அவரது குழந்தை பிறந்து பதினைந்து மாதமாகிறது.
 
ஜலந்தருக்கு அருகில் உள்ள பராஸ்ராம் பூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் மல்யுத்தத்தில் ஈடுபட்டார் ருபிந்தர். இரண்டு வருடங்களுக்கு பிறகு துருக்கியில் நடந்த ஒரு போட்டியில் இந்தியாவுக்காக கலந்துகொண்டு தங்கம் வென்று தந்தார் ருபிந்தர் சந்து. மல்யுத்தப் போட்டியில் புகழ் பெற்ற போகத் சகோதரிகள் ருபிந்தருக்கு நெருங்கிய நண்பர்களாவர்.
 
ஆஸ்திரேலியக் கொடியேந்தும் மார்க் நோல்ஸ்
 
கோல்ட் கோஸ்ட் மக்கள் தங்கள் உள்ளூர் நாயகன் சாலி பியர்சனுக்கு காமன்வெல்த் துவக்க விழா நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தி வலம்வரும் பொறுப்பு கொடுக்கப்படும் என நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அந்த பொறுப்பு தற்போது பிரபல ஹாக்கி வீரரும் அணியின் கேப்டனுமான மார்க் நோல்ஸிடம் வழங்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவுக்காக நோல்ஸ் 300-க்கும் அதிகமான ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏதென்ஸ் ஒலிம்பிக் மற்றும் கடைசியாக நடந்த மூன்று காமன்வெல்த் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்காக அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பியர்சனுக்கும் துவக்க விழாவில் முக்கியமான பொறுப்பு தரப்படும் என ஆஸ்திரேலிய விளையாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
கர்ராரா ஸ்டேடியத்துக்கு அருகிலுள்ள தெருவில் உள்ள வீட்டில் பிறந்தவர் பியர்சன். காமன்வெல்த் போட்டிகளில் நூறு மீட்டர் தடை தாண்டி ஓடும் பந்தயத்தில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற பெண்மணி சாலி பியர்சன்.
 
உலகம் முழுவதும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை விட ஹாக்கி வீரர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்ற கூற்று ஆஸ்திரேலியாவுக்கு பொருந்துமா? 33 வயது ஹாக்கி வீரர் நோல்ஸ் அந்நாட்டில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை விட இருபது மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்.
 
நோல்ஸின் குடும்பத்தின் ரத்தத்தில் ஹாக்கி இருக்கிறது. நோல்ஸின் மனைவி ஆஸ்திரேலியாவின் சிறந்த வீராங்கனையான சிமி டயரின் தங்கை கெல்லி.
 
இவர்கள் இருவருக்கும் பிறந்த மூன்று குழந்தைகளான ஃபிலின், லூக்கா மற்றும் ஃபிராக்கி ஆகியோரும் ஹாக்கி விளையாடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்