பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு, இன்று, ஞாயிற்றுகிழமை முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரிகளில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுத்ததைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சில பொருட்களுக்கான வரி 70% அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்கிக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் 'ஜெனரலைஸ்ட் சிஸ்டம் ஆஃப் பரிஃபிரான்சஸ்' எனும் வர்த்தக முன்னுரிமை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும், முன்பு வரிவிலக்கு பெற்றுவந்த, சுமார் 560 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகையை நிறுத்தும் அமெரிக்கா
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் இந்த வரிச்சலுகைகளை கருதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமெரிக்கப் பொருட்களுக்கு 120% வரை வரி அதிகமாகும் என்று இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. எனினும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததால் அவை இதுவரை அமலுக்கு வரவில்லை.
அப்போது வெளியான பட்டியலில் 29 பொருட்களுக்கு வரி அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பட்டியலில் இருந்து ஆர்டெமியா எனும் வகை இறால் நீக்கப்பட்டு 28 பொருட்களுக்கான வரி தற்போது அதிகமாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு நிலவரப்படி இரு தரப்பு வர்த்தகம் 142 பில்லியன் (14,200 கோடி) அமெரிக்க டாலராக இருந்தது. இது 2001இல் இருந்த அளவைவிட ஏழு மடங்கு அதிகமாகும்.
அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு வரியை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவும் பல அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு கடந்த ஆண்டு வரியை அதிகரித்தது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை ஜப்பானில் நடக்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சந்திக்கவுள்ள நிலையில் இந்தியா வரிகளை உயர்த்தியுள்ளது.