இந்தியா - சீனா - இலங்கை: கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் தளமாக மாறிவிடுமா? இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (23:39 IST)
கொழும்பு நகரின் கடற்பகுதியில் பளபளப்பாக எழும்பி வரும் துறைமுக நகரம் "பொருளாதார ரீதியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரக் கூடியது" என அதிகாரிகள் வருணிக்கிறார்கள்.
 
கடலிலிருந்து எடுக்கப்பட்ட மணலைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த இடம், ஓர் உயர்தர தொழில்நுட்ப நகரமாக மாற்றப்பட்டு, ஒரு வெளிநாட்டு சர்வதேச நிதி மையமாகவும், குடியிருப்பு பகுதியாகவும் கட்டமைக்கப்பட உள்ளது. இந்நகரம் துபாய், மொனாக்கோ, ஹாங்காங் ஆகிய நகரங்களோடு ஒப்பிட வைக்கிறது.
 
"இலங்கை தன் நிலபரப்பை மாற்றி வரைந்து கொள்வதற்கான வாய்ப்பை, கடலிலிருந்து எடுக்கப்பட்ட மணலில் கட்டமைக்கப்படும் இந்த நிலப்பரப்பு வழங்கிறது. மேலும் துபாய், சிங்கப்பூர் உடன் போட்டியிடும் அளவுக்கு ஓர் உலகத் தர நகரத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது" என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஆனால், எதார்த்தத்தில் இலங்கைக்கு இந்த நகரம் எந்தளவுக்கு பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரும் என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
665 ஏக்கர் (2.6 சதுர கிமீ) புதிய நிலப்பரப்பை உருவாக்குவதற்கு சீன துறைமுக பொறியியல் நிறுவனம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக இலங்கை அந்த நிறுவனத்திற்கு 43 சதவீத நிலப்பகுதியை 99 ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாமல் உயரும் நெல் விலை - என்ன காரணம்?
இலங்கை மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு - களநிலவரம் என்ன?
காசுமில்லை, காகிதமும் இல்லை: இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்
பல்லாண்டு காலமாக கடற்பகுதியை ஆழப்படுத்துவது தூர்வாருவது போன்ற டிரெட்ஜிங் பணிகளுக்குப் பிறகு, தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது இது வேகமடைந்து புதிய நகரம் வடிவம் பெற்று வருகிறது.
 
சீன பொறியாளர்களால் கண்காணிக்கப்படும் பெரிய கிரேன்கள் கான்கிரீட் திட்டுகளை நகர்த்துகின்றன, மறுபக்கம் மண் அள்ளும் எந்திரங்கள் லாரிகளில் டன் கணக்கில் மணலை நிரப்பி வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நிலப்பரப்பின் வழியாக ஒரு நதி செல்கிறது. அது ஏற்கனவே தூர்வாரப்பட்டு, அதில் சிறு படகுகள் மற்றும் சிறு சொகுசுக் கப்பல்கள் சென்று வர அனுமதிக்கிறது.
 
தெற்காசியாவிலேயே முதல் முறையாக இம்மாதிரியான திட்டம் இலங்கையில்தான் மேற்கொள்ளப்பட்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவடைய சுமார் 25 ஆண்டுகள் ஆகும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
 
 
இந்நகரத்தில் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மற்றும் சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட பகுதிகள் பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என இலங்கை கூறுகிறது. இங்கு வரக்கூடிய நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் மீது, இலங்கை அரசு வரி கூட விதிக்கலாம்.
 
புதிய நகரத்தில் சுமார் 80,000 பேர் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு முதலீடு செய்து வணிகம் செய்பவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சம்பளம் உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலர்களில் இருக்கும்.
 
ஆசியா மற்றும் ஐரோப்பா இடையிலான வர்த்தக மேம்பாட்டிற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் 'பெல்ட் அண்ட் ரோட்' திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு காலத்துக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டு அவர் கொழும்பு வந்திருந்த போது இலங்கையில் இந்த துறைமுக நகரத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
 
2009-ல் தமிழ் பிரிவினைவாதிகளுடான போர் முடிவுக்கு வந்த பிறகு, மீண்டும் நாட்டை சீரமைக்க சீனாவிடம் அன்றைக்கு இலங்கை நிதி உதவி கேட்டிருந்தது. அக்காலகட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்திருந்தன.
 
சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின் போது, மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் அதிபராக இருந்தார், ஆனால் அவர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். சீனாவிடமிருந்து இலங்கை வாங்கிய கடன், குறிப்பாக தெற்கில் ஹம்பன்டோட்டா துறைமுகம் தொடர்பான கடன் விவகாரம், அன்றைய வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
 
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜபக்ஷ பிரதமராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ அதிபராக உள்ளார்.
 
 
ஆனால் ஹம்பன்டோட்டா துறைமுகம் தற்போது இலங்கையின் கையில் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கத்தின் கீழ், சீனாவிடம் இருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டது. அத்துறைமுகம் வழியாக ஈட்டிய வருவாயைக் கொண்டு மற்ற சில கடன்கள் அடைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
 
இலங்கையில் புதிதாக உருவாகவுள்ள துறைமுக நகரத்தைக் குறித்து ஒரு தரப்பினர் மகிழ்ச்சியடையாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல் உட்பட பல கவலைகள் உள்ளன.
 
இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் குறிப்பிடும் அளவுக்கு, நாட்டுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது என மற்ற சிலர் அச்சப்படுகின்றனர்.
 
"இந்த துறைமுக நகரத்துக்கென பிரத்தியேக வரிச்சலுகைகள் அதன் சட்டங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த சட்டத்தின்படி சில முதலீட்டாளர்கள் 40 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இது துறைமுக நகரத்தைக் குறித்த மிகப்பெரிய எதிர்மறை விஷயமாக இருக்கலாம்" என்கிறார் வெரைட் ரிசர்ச் என்கிற அமைப்பைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் தேஷால் டி மெல்.
 
மேலும் "இவ்வளவு பெரிய வரிச்சலுகைகள் இலங்கையின் ஒட்டுமொத்த வருவாய் விகிதத்தை மேம்படுத்தாது" என்றும் கூறினார்.
 
குறைந்த அளவிலான வரிகளை அறிவிப்பது போன்ற தளர்த்தப்பட்ட வணிக விதிகள் காரணமாக, அப்பகுதி பணச்சலவை செய்பவர்களுக்கான இடமாக மாறலாம் என்று எச்சரித்துள்ளது அமெரிக்கா.
 
அதை இலங்கையின் நீதித்துறை அமைச்சர் மொஹம்மத் அலி சப்ரி மறுக்கிறார்.
 
 
"சாதாரண குற்றவியல் சட்டம் இங்கு பொருந்தும் என்பதால், பணச்சலவை எல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எங்களிடம் பணச் சலவைச் சட்டம் உள்ளது, எங்கள் நிதிப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. எனவே, யாரும் கருப்பு பணம், பணச் சலவை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பமுடியாது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதைக் குறித்த கவலையில் இருக்கிறது இந்தியா. காரணம், இலங்கையை, சீனாவின் பின் வாசலாகக் கருதுகிறது இந்தியா.
 
மேலும், இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் துறைமுக நகரம் இலக்கு வைக்கிறது. அது இந்தியாவின் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கலாம்.
 
இது சம்பந்தமாக இந்தியா மட்டுமல்ல இலங்கையும் கொஞ்சம் கவலைப்படவேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
 
2020 ஆம் ஆண்டில், லாவோஸ் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இருநாடுகளை இணைக்கும் (சீனா லாவோஸ்) ரயில்வே பாதை திட்டத்தில் சீனா முதலீடு செய்ய, லாவோஸ் தன் எரிசக்தி அமைப்பின் ஒரு பகுதியை சீனாவிற்கு விற்றது.
 
கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த கோரிக்கை
 
இந்தியாவுடன் நெருங்கும் இலங்கை: அவசரப் பயணம் மேற்கொள்ளும் சீன வெளியுறவு அமைச்சர்
 
எதிர் காலத்தில், ஹம்பன்டோட்டா, கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் தளங்களாகுமா?
 
"இந்த அரசாங்கம் சீனர்களுக்கு இணங்கிய நேரத்தில், துறைமுக நகரத்தில் உள்ள அனைத்தையும் சீனா கையகப்படுத்தியுள்ளது," என இலங்கை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிதா சேனரத்ன பிபிசியிடம் கூறினார்.
 
மேலும் "ஒருநாள், எதார்த்தத்தில் இத்திட்டத்தில் இலங்கைக்கென ஒன்றுமே இல்லாத நிலை வரும்" என்றும் கூறினார்.
 
சீன கல்வியாளர் ஜௌ போ இதை முற்றிலும் மறுத்து, இரு நாடுகளும் பயனடைவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.
 
"சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் ஒரு தொண்டு அல்ல. நாங்கள் பரஸ்பரமாகப் பயனடைய விரும்புகிறோம். அதாவது எங்களது முதலீடுகளும் பொருளாதார ரீதியில் லாபம் ஈட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் மற்றும் முன்னாள் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியின் மூத்த கர்னல் சௌ பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"எந்த நாட்டையும் கடனில் மூழ்கடிக்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை' என்று கூறினார்.
 
இலங்கை அதிகாரிகளும் அதையே கூறுகிறார்கள்.
 
"துறைமுக நகரத்தின் முழுப் பகுதியும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரோந்து செல்வதற்கான உரிமை, காவல்துறை, குடியேற்றம் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு பொறுப்புகள் இலங்கை அரசாங்கத்திடம்தான் உள்ளன" என்று துறைமுக நகர பொருளாதார ஆணையத்தைச் சேர்ந்த சாலிய விக்ரமசூரிய தெரிவித்தார்.
 
தற்போது இலங்கை எதிர்கொண்டு வரும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், அவர்களிடமும் அதிக தேர்வுகள் இல்லை.
 
கொரோனா பெருந்தொற்று இலங்கையின் சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.
 
தற்போது இலங்கை நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் 45 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அதில் சீனாவுக்கு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர் கொடுக்க வேண்டியுள்ளது.
 
நிதி சார் உதவிகளுக்கு கோரிக்கை வைத்திருப்பதற்கு இடையில், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்த போது, கடன்களை மறுசீரமைப்பது குறித்து இலங்கை பேச்சு வார்த்தை நடத்தியது.
 
சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இலங்கையின் தரத்தைக் குறைத்து வருவதால், சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடன் கேட்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகத் தெரிகிறது.
 
சீனாவிடம் மட்டுமே நீண்ட கால இலக்குகளும், பணமும் இருக்கிறது.
 
ஆனால் எல்லாவற்றோடும் சில பிரச்சனைகளும் இருக்கலாம். எதிர்காலத்தில் ஆசியாவின் இந்த பகுதியில் தன் பிடியை வலுப்படுத்த, இலங்கையில் ஹாங்காங் போன்றதொரு நகரத்தை சீனா உருவாக்குவது, அவர்களுக்கு உதவலாம் என சிலர் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்