இந்தியாவின் பிரபலமான 'பெருந்தாய்' புலி உலகம் முழுக்க போற்றப்படுவது ஏன்?
செவ்வாய், 18 ஜனவரி 2022 (14:03 IST)
நாட்டின் மிகவும் பிரபலமான புலிகளில் ஒன்றான காலர்வாலி தனது 16ஆவது வயதில் கடந்த வார இறுதியில் இறந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலமான பென்ச் புலிகள் காப்பகத்தில் இருந்த காலர்வாலி புலி அந்த சரணாலயத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
இந்த புலிக்கு காலர்வாலி என பெயர் உண்டாவதற்கான காரணம், இந்தப் புலியின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் தான். இதன் வாழ்நாளில் இதுவரையில், 8 பிரசவத்தில் 29 புலி குட்டிகளை ஈன்று உள்ளது. மிகவும் பிரபலமான புலிகளில் ஒன்றான காலர்வாலி தனது 16வது வயதில் கடந்த வார இறுதியில் இறந்தது.
இந்த புலி இவ்வளவு பிரபலம் ஆவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது பிபிசி எடுத்த 'Spy in the Jungle' ஆவணப்படம் தான். அந்த ஆவணப்படத்தில் நான்கு புலிகளின் வாழ்க்கை கண்காணிக்கப்பட்டது. அந்த நான்கு புலிகளில் காலர்வாலி புலியும் ஒன்றாகும்.
பிபிசியின் ஆவணப் படத்துக்கு பிறகு காலர்வாலி மற்றும் அந்தப் புலியின் தாயை தேடி சரணாலயத்துக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதிகமானதாக கூறுகிறார் பிரபீர் பாட்டீல். இயற்கை ஆர்வலரான இவர் 2004யில் இருந்து அந்த சரணாலயத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலையில் உடல்நிலை குறைவால் இறந்துள்ளது இந்த காலர்வாலி புலி. இயற்கை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் அந்த புலியை பற்றி அதன் மேலுள்ள பிரியத்தில் அதிகம் பேசுகிறார்கள் . அதற்கு முக்கியமான காரணம் இந்த புலி இவர்கள் கண்முன்னே வளர்ந்தது.
இந்தப் புலி வளர்ந்த காட்டுப் பகுதியே மையமாக வைத்து ருட்யார்ட் கிப்லிங்கை, 'தி ஜங்கிள் புக்' என்ற புத்தகத்தை எழுதத் தூண்டியதாக நம்பப்படுகிறது. 2005-ல் பிறந்த காலர்வாலிக்கு முதலில் T-15 என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னாளில் அதற்கு காலர்வாலி என்று பெயர் மாற்றப்பட்டது. காலர்வாலியின் தாய் புலியும் ஒரு பிரபலமான புலியாகவே இருந்தது அது - "படி மாதா" அல்லது "பெரிய அம்மா" என்று அழைக்கப்பட்டு வந்தது. காலர்வாலியின் தந்தையின் பெயர் T-1.
நாளடைவில் காலர்வாலி புலி "மாதரம்" என்றும் அழைக்கப்பட்டது. அப்படி என்றால் ஒரு பொறுப்புள்ள தாய் என்று பொருள். காலர்வாலி நடவடிக்கையால் இந்த பெயர் அதற்கு வைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
காலர்வாலி புலி வருகைக்கு பிறகு இந்த சரணாலயத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு முன் புலிகளை பார்க்க வருபவர்கள் பல நாட்கள் புலிகளை பார்க்க முடியாமலே செல்வார்கள். ஆனால் இந்த புலி வருகைக்குப் பின்பு புலிகளை பார்க்க செல்லும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் அதை பார்ப்பதற்கான வாய்ப்பு அமையும் என்கிறார்கள்.
காப்பகத்தின் பாதுகாவலர் விவேக் மேனன் கூறுகையில் "காப்பகத்தின் முகம் " என்று காலர்வாலி புலியை அழைக்கிறார். ஏனென்றால் அந்தப் புலியின் தனிப்பட்ட குணாதிசயங்கள்தான் பார்வையாளர்கள், புகைப்பட ஆர்வலர்கள் என்று அனைவரும் அதிகமாக வருவதற்கு காரணம் என்கிறார்.
அந்த சரணாலயம் அருகில் பிறந்து வளர்ந்த இயற்கை ஆர்வலர் முகமது ரபீக் ஷேக் கூறுகையில் "வெகு சில நாட்களே காலர்வாலி புலியை பார்க்க வந்த பார்வையாளர்கள் அதை பார்க்காமல் போவதுண்டு. பார்வையாளர்களின் வண்டி அருகே எந்த வித அச்சமும் இல்லாமல் வந்து பார்க்கும் அளவு மிகவும் தோழமையானது" என்கிறார்.
உலகின் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகளின் தாயகமாக இந்தியா இருந்து வரக்கூடிய சூழலில், புலிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சமீபத்திய கணக்கின் படி புலிகளின் எண்ணிக்கை 2,976 ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்கம் தரவுகள் மூலம் கணக்கிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தியா முழுவதும் அமைந்துள்ள 51 புலிகள் காப்பகங்களில் ஏதாவது ஒரு காப்பகத்திற்கு சென்று புலிகளைப் பார்வையிடுகிறார்கள்.
காலர்வாலி புலி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, தனக்கும் தன் குட்டிகளுக்கும் என காட்டில் தனி ஒரு பகுதியை அது தக்க வைத்துக் கொண்டது. அந்தப் பகுதியில் வேறு எந்த மிருகங்களையும் வர அனுமதிக்காதாம்.
உடல் அளவில் மிகப் பெரியதாக இருக்க கூடிய காலர்வாலி புலியின் உடல் கட்டமைப்பை, வெளியிலிருந்து வரக்கூடிய சரணாலய அதிகாரிகள் பார்க்கும் போது அது ஒரு ஆண் புலி என்று நினைத்தது உண்டு என்கிறார்கள்.
இதுவரையில் 29 குட்டி ஈன்று உள்ள காலர்வாலி புலியின் குட்டிகளில் 25 குட்டிகள் உயிரோடு உள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஒரு சாதனையாகும்.
காலர்வாலியின் முதல் மூன்று குட்டிகள் 2008-ல் நிமோனியாவால் இறந்தன, ஆனால் அதன் பிறகு குறைந்த இடைவெளியில் மீண்டும் அது குட்டிகளை ஈன்றது மகிழ்ச்சியான தருணம் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக 2010 இல் ஐந்து குட்டிகள் ஈன்றது என்பது மிகவும் அரிது என்கிறார்கள்.
பொதுவாக புலிகள் குட்டிகளை ஈன்றதும் முதல் 2 வருடம் வரை குட்டிகளை தன்னுடன் வைத்துக் கொள்ளும். ஆனால் காலர்வாலி, பிறந்த தன் குட்டிகளை விரைவாகவே தனியாக இரை தேடும் பழக்கத்திற்கு அனுமதித்தது என்கிறார்கள்.
காலர்வாலி புலிக்கு அதிக முறை சிகிச்சை அளித்துள்ள காப்பகத்தின் கால்நடை மருத்துவர் டாக்டர் அகிலேஷ் மிஸ்ரா கூறுகையில், "மிகவும் வலிமையான புலி அது , தன் குட்டிகளுக்காக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வேட்டையாடும்" என்கிறார். "அதற்கு சிகிச்சை அளித்ததில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
காலர்வாலி புலி சரணாலயத்துக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது என்றும், இது அந்தப் புலியின் வாழ்நாள் சாதனை என்றும் கூறுகிறார் சரணாலய பாதுகாவலர் திரு மேனன்.
பிபிசி இந்த புலி சம்பந்தமாக யாரிடம் கேட்டாலும் எல்லோரும் ஏதோ ஒரு அனுபவத்தை இந்த புலியுடன் பகிர்கிறார்கள். உதாரணமாக திரு பாட்டீல் கூறுகையில் , காலர்வாலி புலி ஒரு முறை ஒரு சிறுத்தையை துரத்திய போது சிறுத்தை மரத்தின் மீது ஏறி தப்பித்து கொண்டதாகவும், தனது வேட்டையின் போது இடையில் வந்த சிறுத்தையால் கோபம் அடைந்து இதை அது செய்ததாகவும் அவர் சொன்னார்.
அதேபோல் காலர்வாலி புலிக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதை ஏதாவது வகையில் மற்றவர்களிடம் சொல்ல நினைக்கும் என்கிறார் கால்நடை மருத்துவர் அகிலேஷ் மிஸ்ரா.
அது இறப்பதற்கு முன்பு கூட அப்படி ஒரு சைகை மூலம் சொன்னது, அதற்கு உடல்நிலை சரி இல்லை என்று. பொதுவாக அந்த சைகை திறந்தவெளியில் படுப்பதே ஆகும்.
காலர்வாலி புலியின் இறுதிச் சடங்கு அந்த சரணாலயத்தில் நடைபெற்றது. இதில் இயற்கை ஆர்வலர்கள், பாதுகாவலர்கள், அந்த பகுதி கிராம மக்கள் என அனைவரும் மலர் தூவி தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
காலர்வாலி புலி இறந்ததற்கு பிறகு அதற்கான ஒரு காணொளியை அந்த சரணாலயத்தில் உள்ளவர்கள் வெளியிட்டனர். அந்தக் காணொளி தொடக்கத்தில் காலர்வாலி புலி அந்த சரணாலயத்தின் புல்வெளியில் அமர்ந்தது போல காட்சி அமைக்கப்பட்டு அதற்கு கீழ் பிரியமான காலர்வாலி என்று எழுதி இருந்தனர்
காலர்வாலி புலிக்கு இணையானது காலர்வாலி புலிதான் என்றும், "அதை இழந்ததை நினைத்து நாங்கள் வருத்தப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த புலி செய்த எண்ணற்ற நல்லதை கொண்டாட நினைக்கிறோம்" என்கிறார் கால்நடை மருத்துவர் மிஸ்ரா.
"காலர்வாலி புலி ஒரு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து உள்ளது ,"என்று திரு ஷேக் கூறுகிறார். "காலர்வாலி புலியின் மரணத்தால் நாங்கள் வருந்துகிறோம், ஆனால் இந்த புலி என்றும் எங்கள் இதயங்களில் வாழும்" என்றார்.