ஹைட்ரோகார்பன்: "விவசாய மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்" - சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயராமன்

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (19:24 IST)
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மூலம், தற்போதுள்ள மத்திய அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு என்பதை வெளிப்படையாக உணர்த்தியுள்ளது என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஜெயராமன்.

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்துவரும் பேராசிரியர் ஜெயராமன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் அவசியம் என்றும் பெருநிறுவனங்கள் எளிதாக லாபம் ஈட்டுவதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய அறிவிப்பை திரும்பப்பெறவேண்டும் எனவும் காட்டமாக விமர்சிக்கிறார்.

''ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுற்றுச்சூழலை பேணி காக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில், பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சுரண்ட எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை என அரசாங்கமே சொல்லுவதைவிட மோசமான செயல் என்னவாக இருக்கும்?,'' என கேள்வியெழுப்புகிறார்.

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராமங்களில் மக்கள் தொடர்ந்து போராட்ட மனநிலையில் இருக்கிறார்கள் எனக்கூறும் ஜெயராமன்,''காவிரி படுகை மாவட்டங்கள், பாதுகாக்கவேண்டிய வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படவேண்டிய பகுதி. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் எண்ணெய் கிணறுகளாக இந்த விளைநிலங்களைப் பார்க்கிறார்கள். இந்த திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

நம் விளைநிலங்களை பணம் கொழிக்கும் கிணறுகளாகப் பார்க்கிறார்கள். தமிழர்களை அவர்களது சொந்தமண்ணில் அகதியாகும் திட்டங்கள் இவை,'' என்கிறார் ஜெயராமன்.

"இதுநாள்வரை இருந்த, ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பது மற்றும் உற்பத்தி கிணறுகள் அமைப்பது என இரண்டு நிலைகளிலும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி மற்றும் மக்களின் கருத்து பெறப்படவேண்டும் என்ற விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது பெரும் சேதத்தை விளைவிக்கும்,'' என்கிறார்.

ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோன்றுவதற்கு விடப்பட்ட ஏலம் ஐந்தாவது சுற்றுவரை நடந்துவிட்டது.

இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தால், "விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். இதோடு இந்த பிரச்சனை முடியாது. எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தால், காவிரி பகுதிக்கு அருகில் உள்ள கடல்பகுதியும் பாதிக்கப்படும். விவசாய பூமி, கடல் என இரண்டு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டமாக ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளது,''என்கிறார்.

தமிழக அரசு உடனடியாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றும் மத்திய அரசை கண்டிக்கவேண்டும் என்றும் கோருகிறார் ஜெயராமன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்