காபி ஃபில்டரை கண்டுபிடித்த மெலிட்டா பென்ட்ஸ் வெற்றிகரமான பெண் தொழிலதிபர் ஆனது எப்படி?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (21:27 IST)
1908 இல் மெலிட்டா பென்ட்ஸ் காபி ஃபில்டர் வடிகட்டியை கண்டுபிடித்தார். இந்த பானத்திற்கான தேவை ஐரோப்பாவில் அதிகரித்து வந்தது.
 
தினமும் காலையில் எழுந்ததும் காபி பருகும் பழக்கம் ஜெர்மனியை சேர்ந்த மெலிட்டா பென்ட்ஸ் (1873- 1950) என்ற பெண்மணிக்கு  இருந்தது. ஆனால் காபியை  சுவைத்து முடித்த பிறகு அவர் புத்துணர்ச்சியாக உணர்வதற்கு பதிலாக அசௌகரியத்தை அனுபவித்தார்.
 
காபியின் கசப்பு சுவையும். அவரின் வாயில் ஒட்டியிருந்த காபித் தூளின் கசடும் அவரை அவ்வாறு வெறுப்பாக உணர வைத்தது. அப்போது குடும்ப தலைவியாக இருந்த மெலிட்டா, காபி பருகுவதில் தமக்கு எழுந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுத்தார்.
 
அதன் முதல்கட்டமாக, சொந்த ஊரான டெரிஸ்டனில் இருந்த தமது வீட்டு சமையலறையில் ஒரு பானத்தை அவர் தயாரித்தார். அது பருகுவதற்கு மிகவும் சுவையாக இருந்ததால் ஜெர்மனியை தாண்டி, ஐரோப்பா முழுவதும் அந்த பானம் மெல்ல மெல்ல பிரபலமடைந்தது.
 
அதன் தொடர்ச்சியாக, பென்ட்ஸ் ஒரு நாள் தனது மகனின் பள்ளிப் புத்தகத்தில் இருந்து ஒரு துண்டு காகிதத்தை கிழித்து, அதை பழைய தகர பானையில் வைத்தார். அத்துடன் அதில் சில துளைகளும் இட்டார்.
 
அதன் பின்னர் அதில் கொஞ்சம் காபித் தூளை சேர்த்து அதன் மீது சுடு தண்ணீரை ஊற்றினார். அப்போது காகிதத்தின் வழியே நேராக கோப்பைக்குள் இறங்கிய  காபி டிக்காஷன் சீரான திரவமாக இருந்தது.  கசடு இல்லாமல் இருந்த அந்த திரவத்தில் கசப்பு சுவையும் குறைவாக இருந்தது.
 
டைட்டானிக் கப்பலை சுற்றி இத்தனை ஆபத்துகள் உள்ளனவா? ஆய்வாளர்களின் ஆழ்கடல் பயண அனுபவம்
 
மெலிட்டா பென்ட்ஸ் தனது மகனின் பள்ளிக் குறிப்பேட்டில் இருந்து ஒரு துண்டு காகிதத்தைக் கொண்டு முதல் காபி வடிகட்டியை (ஃபில்டர்) உருவாக்கினார்.
 
பழைய தகர பானையில் காகித துண்டுகளை வைத்து தான் தயாரித்த காபி டிக்காஷன் மூலம், முதல் காபி ஃபில்டரை தன் கண் முன் கண்டார் மெலிட்டா. தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், தனது இந்த கண்டுபிடிப்பை சோதனை முறையில் மேம்படுத்தும் நோக்கில், தன் நண்பர்களுக்கு தினமும் பிற்பகலில் ‘காபி விருந்து’ அளித்தார்.
 
அவரது இந்த கண்டுபிடிப்பு பொதுமக்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 1908 இல் அதற்கு  காப்புரிமை பெற்றார். அத்துடன் தனது கணவர் ஹியூகோ பென்ட்ஸுடன் இணைந்து டெரிஸ்டனில், காபி வடிகட்டிகள் (ஃபில்டர்) உற்பத்தி  மற்றும் விற்பனை செய்வதற்கான நிறுவனத்தையும் தொடங்கினார்.
 
தனது கண்டுபிடிப்பு தனித்துவமானது என்று உறுதியாக நம்பிய அவர், அதை அனைத்து கடைகள், கிடங்குகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளில் மக்களின் பார்வைக்கு வைத்து பிரபலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்.
 
அத்துடன் தனது வீட்டின் ஐந்து அறைகளை காபி ஃபில்டர்கள் தயாரிக்கும் பட்டறையாக மாற்றினார்.  அங்கு தயாரிக்கப்பட்ட ஃபில்டர்களை மெலிட்டாவின் மகன்களான வில்லி மற்றும் ஹார்ஸ்ட் தள்ளுவண்டியில் வைத்து தேவையான விற்பனை நிலையங்களுக்கு விநியோகம் செய்து வந்தனர்.
 
1909 இல் லீப்ஜிக்கில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் 1,000க்கும் மேற்பட்ட காபி ஃபில்டரை விற்று தீர்த்து சாதனைப் படைத்தது மெலிட்டா நிறுவனம்.
 
ஐந்து ஆண்டுகளுக்கு பின் தொழிலதிபராக வளர்ந்திருந்தார் மெலிட்டா. அவரது கண்டுபிடிப்பான காபி ஃபில்டர்களுக்கு சந்தையில் தொடர்ந்து தேவை இருந்து கொண்டிருந்ததால் அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு மேலோங்கியது.
 
அதையடுத்து, தனது நிறுவனத்தை பழைய லாக்ஸ்மித் பகுதிக்கு மாற்றினார். அங்கு காபி ஃபில்டர்கள் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் புதிய இயந்திரத்தை நிறுவியதுடன், தனது நிறுவனத்தில் 15 பேரை பணியிலும் அமர்த்தினார் மெலிட்டா. இருப்பினும் 1914 இல் வெடித்த முதல் உலகப் போரின் விளைவாக நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
 
முதலாம் உலகப் போரின் போது, ​​மெலிட்டா பென்ட்ஸின் கணவரும் மூத்த மகனும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்
 
முதல் உலகப்போர், மெலிட்டாவின் குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்தியது. அவரது கணவரும், முதல் மகன் வில்லியும் ஜெர்மனி ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
 
அதன் விளைவாக, தனது நிறுவனத்தை மெலிட்டா தனியாக  நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் அவரது குடும்பத்தின் மொத்த பொருளாதார தேவையையும் மெலின்டாவின் நிறுவனமே பூர்த்தி செய்யும்படி ஆனது. 
 
ஆனால், காபி கொட்டைகள் இறக்குமதி மற்றும் ஃபில்டர் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு போன்ற காரணங்களால் காபி ஃபில்டர் தயாரிப்பு தொழில் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதனால் அதன் உற்பத்தியை நிறுத்த வேண்டியதானது. தனது குடும்பத்தின் பொருளாதார தேவையை சமாளிக்க அட்டைப் பெட்டிகளை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்  மெலிட்டா.
 
முதல் உலகப் போர் முடிவடைந்த பிறகு. சந்தையில் காபி ஃபில்டருக்கு மீண்டும் தேவை அதிகரித்தது. மெலிட்டாவின் நிறுவனமும் மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட துவங்கியது.
 
அப்போது தனது நிறுவன பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸை அதிகரிப்பது, விடுமுறை நாட்களை கூட்டுவது, வார வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைப்பது என்று தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள மெலிட்டா முடிவெடுத்தார்.
 
அடால்ஃப் ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சி காபி வடிகட்டிகள் உற்பத்திக்கு தடை விதித்தது.
 
இருப்பினும்,  மெலிட்டா நிறுவனத்தின் வர்த்தகம், சில ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாம் உலகப் போரின் காரணமாக மீண்டும் தடைப்பட்டது.
 
1942 இல் ஹிட்லர் தலைமையிலான ஆட்சியில் காபி ஃபில்டர்கள் உற்பத்திக்கு  தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, போருக்கும், ஜெர்மன் ராணுவத்திற்கும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய மெலிட்டாவின் நிறுவனம் வற்புறுத்தப்பட்டது. இதையடுத்து, ஹிட்லர் அரசுடன் இணைந்து, தேசிய சோசலிச ஆலையாக அவரது நிறுவனம் செயல்பட்டது.
 
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, அந்த போரால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் அரசின் திட்டத்திற்கு மெலிட்டா நிறுவனம் தனது பங்களிப்பை அளித்தது.
 
இருப்பினும் 1947 இல் தான் காபி ஃபில்டர்களின் உற்பத்தியை அந்த நிறுவனத்தால் மீண்டும் தொடங்க முடிந்தது. ஆனால்  மூன்றாண்டுகளுக்குப் பிறகு, 1950 இல் ஜூன் 29 ஆம் தேதி, தனது 77 ஆவது வயதில்  மெலிட்டா பென்ட்ஸ் காலமானார்.
 
பெண் தொழிலதிபரான மெலிட்டா, தனது நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் அதிக விடுமுறை நாட்கள் உள்ளிட்ட தொழிலாளர் நலம் சார்ந்த முடிவுகளை மேற்கொண்டார்.
 
2 பில்லியன் டாலர்கள் லாபம்
மெலிட்டாவின் மறைவுக்கு பிறகு, அவரின் பிள்ளைகள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
 
1959 இல் அவர்கள், மைண்டன் நகரில் ஒரு புதிய ஆலையை நிறுவினர். ஐரோப்பா அளவில் மிகவும் நவீன இயந்திரத்துடன் நிறுவப்பட்ட அந்த காகித ஆலை இன்றும் இயங்கி வருகிறது.
 
நாளடைவில் மெலிட்டா நிறுவனம் காபி ஃபில்டர்கள் உற்பத்தியுடன், பிற பொருட்களையும் தயாரிக்க தொடங்கியது. வேக்கம் கிளீனர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தேவையான பைகள் அங்கு உற்பத்தி செய்யப்பட்டன.  
 
‘மெலிட்டா குரூப்’ என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் இன்று உலகம் முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2021 ஆண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனம் ஆண்டுதோறும் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு லாபம் லாபம் சம்பாதித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்