சிங்கப்பூர்: 'ஹைடெக்' தேர்வு மோசடி - நடந்தது என்ன ?

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (14:12 IST)
2016ஆம் ஆண்டு நடந்த தேர்வுகளில் ஆறு சீன மாணவர்கள் மோசடி செய்ய உதவி செய்ததை சிங்கப்பூர் ஆசிரியர் ஒருவர் ஒப்புக்கொண்டார். இது மிகப்பெரிய சதி என்று அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
 
தனித்தேர்வராக தேர்வில் கலந்துக் கொண்ட தன் ஜியா யன், ஃபேஸ்டைம் செயலி (FaceTime) மூலம் கேள்விகளைப் பெற்று பிறகு மாணவர்களுக்கு மொபைல் மூலம் பதில்களை சொல்வார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
 
மாணவர்கள் உடலில் மொபைல் ஃபோன்களை மறைத்து வைத்து, தோல் நிறத்திலேயே இருக்கும் இயர் ஃபோன்கள், ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்தியும் தேர்வுகளில் கலந்து கொண்டார்கள்.
 
27 குற்றச்சாட்டுகளை தன் ஜியா யன் ஒப்புக்கொண்டார். குற்றம்சாட்டப்பட்ட 3 பிற நபர்கள் மோசடி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.
 
பொதுவாக சுமார் 16 வயது மாணவர்கள் `O` நிலை தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.
 
மோசடியில் ஈடுபட்ட ஒரு மாணவர் தேர்வு அறையில் விடை எழுதிக் கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்து வித்தியாசமான ஓசை எழும்பியதைக் கண்டு சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர், தனியிடத்திற்கு அழைத்துச் சென்று மாணவரின் மேலாடையை கழற்றி பரிசோதனை செய்த்தில் மோசடி அம்பலமானது. அந்த மாணவரிடம் இருந்து மொபைல், ப்ளூ டூத் சாதனம், உடல் நிற இயர் ஃபோன் ஆகியவை கண்டறியப்பட்டன. தன் ஜியா யன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியத்தின் தேர்வுகளில் ஆறு மாணவர்கள் மோசடி செய்ய உடந்தையாக இருந்தனர்.
 
"தேர்வு மோசடி நடவடிக்கைகள்" "மிகவும் அதிநவீனமானவை" என்று அரசு வழக்கறிஞர் வடிவழகன் ஷண்முகா, சேனல் நியூஸ் ஏசியாவிடம் தெரிவித்தார்.அந்த சமயத்தில் தன் ஜியா யன், ஜீயஸ் என்ற கல்வி மையத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார்.
 
அந்த கல்வி மையத்தின் தலைவர் போ யுவான் நிய், ஆசிரியர்கள் ஃபிவோனோ போ மின், ஃபெங் ரிவென் ஆகிய பிற மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.
 
இந்த வார இறுதியில் அடுத்தகட்ட விசாரணை தொடரும்.
 
சீனர் ஒருவரிடம் இருந்து 8,000 சிங்கப்பூர் டாலர்களை வைப்புத்தொகையாக பெற்றதாகவும், ஜீயஸ் கல்வி மையத்திற்கு வரும் மாணவரிடம் 1,000 000 சிங்கப்பூர் டாலர்களை பெற்றதாகவும் போ யுவான் நிய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேர்வில் மாணவர்கள் தோல்வியுற்றால் பணத்தை முழுமையாக திருப்பிச் கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்