தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் 80.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் இந்த அளவுக்கு கனமழை பதிவாவது மூன்றாவது முறை ஆகும்.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டர் மழையும் சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழையும் சென்னை ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
மேலும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் ஜி.பி. சாலை, புளியந்தோப்பு போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னையைப் பொறுத்தவரை, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தகவலின்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே அந்தத் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?
தென் மண்டல வானிலை ஆய்வு மைய தகவலின்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பொழியும்.
நாளை, நவம்பர் 2ஆம் தேதியில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 5ஆம் தேதியில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.