கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு குறையும் - ஆய்வு தகவல்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (15:28 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி : செப்டம்பர் மாதத்துக்கு பிறகுகொரோனா குறையும்

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்துக்கு பிறகுமுடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவர் அனில்குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்களால் செய்யப்பட்ட இந்த ஆய்வு எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

தொற்று பரவல், குணமடைதல், இறப்பு உள்ளிட்டவை பற்றியும் இந்த ஆய்வில் பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு ஒரு கருவியாக இருக்கும் என்றும், தனிமைப்படுத்துதல், பெருந்தொற்று மேலாண்மை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொண்டால் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி: செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
டிவி நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன்,. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிக்க எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதி இல்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரல் ஆனது.

இந்தநிலையில், சென்னை மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் உள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். மேலும் வரதராஜன் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வரதராஜன் குறித்து பேசிய பிறகு மீண்டும் வரதராஜன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ' தனிப்பட்ட முறையில் பகிர்ந்த செய்தி வைரலாகிவிட்டது. மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அளித்த புகாரின் பெயரில், வரதராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் :கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிக பாதிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் 15-30% மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்ற பகுதிகளில் உள்ள தொற்று எண்ணிக்கையை விட, மும்பை, சென்னை, பூனே, டெல்லி போன்ற ஹாட்ஸ்பாட்களில் தொற்று அளவு 100-200 மடங்கு அதிகமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்